For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை செனடாப் சாலை- டர்ன்புல்ஸ் சாலை மேம்பாலத்திற்கு மூப்பனார் பெயர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை செனடாப் சாலை-டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு மூப்பனார் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரூ. 37.8 கோடி செலவில் ஆலந்தூர் சாலை மேம்பாலம், ஜோன்ஸ் சாலை வாகனச் சுரங்கப்பாதை, டர்ன்புல்ஸ் சா-செனடாப் சாலை சந்திப்பு மேம்பாலம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்து பேசுகையில்,

இங்கே தம்பி ஸ்டாலின் பேசும்போது, 9 பாலங்களை 90 கோடி ரூபாயிலே திட்டமிடப்பட்டாலும் கூட 60 கோடி ரூபாயிலே கட்டி முடித்தோம் என்ற பாராட்டுக்குரிய செய்தியை சொன்னார்.

ஆனால் அந்த பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பாராட்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்திலே தான் அன்றிருந்த அதிமுக அரசு இந்த பாலங்களிலே கருணாநிதியும், ஸ்டாலினும் மற்ற அதிகாரிகளும் ஊழல் செய்து விட்டார்கள் என்று கூறி நள்ளிரவிலே எங்களை கைது செய்து எப்படியெல்லாம் வதைத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
இந்த பாலங்களை நாங்கள் கட்டியதால் படாதபாடு பட்டோம்.

அதற்கு பிறகு பாலம் கட்டு என்று யாராவது கேட்டால், கட்டினால் மீண்டும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்கிற பயம்தான் எங்களுக்கு ஏற்பட்டது.

ஒரு பாலம்- என் வீட்டிற்கு பக்கத்திலே கட்டுவதா வேண்டாமா என்ற கேள்விக்குறியோடு போலீஸ் அதிகாரிகள் அனுமதி கொடுக்காமல் இருந்து கடைசியாக என்னுடைய கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்டு என்னுடைய வீடு இருக்கிறது என்பதற்காக அது தடுக்கப்படுகிறது என்பதற்காக மக்களுக்கு பயன்படுகின்ற பாலத்தை நிறுத்தாதீர்கள் என்று நான் அன்றைக்கு கூறினேன்.

இந்த மாநகரத்திலே ஏற்கனவே தியாகி சிவலிங்கத்தின் பெயரால் ஒரு பாலத்தை அமைத்திருக்கிறோம். நாம் தியாகிகளை மறப்பதில்லை என்பதற்கு அடையாளம் அது.

அந்த பாலங்களுக்கு பெயரிட்டிருப்பதைப் போல இப்போதும் இந்த பாலத்திற்கு பெயரிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் முனவர்பாட்சா, எனக்கொரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். "சேமியர்ஸ் சாலை, அண்ணா சாலை சந்திப்பில் திறக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கு மக்கள் தலைவர் மூப்பனார் பாலம் எனப் பெயரிடுமாறு காங்கிரஸ் தோழர்கள் சார்பில் தங்களை அன்புடன் வேண்டுகிறேன்'' என்று எழுதியிருக்கிறார்.

மூப்பனார் எனக்கு நண்பர் மாத்திரமல்ல, தேசிய தலைவர்களிலே ஒருவராக விளங்கியவர். இன்னும் சொல்லப்போனால் கன்னியாகுமரியிலே 133 அடி உயரமுள்ள அய்யன் வள்ளுவர் சிலையை திறந்து வைத்த போது, அதன் திறப்பு விழாவிற்கு எனக்கு பரிசாக அவர் நேரில் வந்து வழங்கிய ஒரு புத்தகம் - அதற்கு பெயர் நீ வெல்வாய்' - அதற்கு பிறகு ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன். எனவே மூப்பனாரின் வார்த்தை வீண் போகவில்லை.

காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று டர்ன்புல் சாலை, செனடாப் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு "மூப்பனார் மேம்பாலம்'' என்று பெயர் சூட்டுகிறேன்.

ஆலந்தூர் ஆப்ரகாம் உங்களுக்கெல்லாம் தெரியும். கிறிஸ்தவ சமுதாய இளைஞன் , தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தன்மான வீரனாக- அந்த சமுதாயத்தின் ஒளி வீசிய நட்சத்திரமாக உழைக்கும் உருவமாக இந்த பகுதியிலே விளங்கி கழகத்தை வளர்த்து, ஏழையெளிய மக்களுக்காக அரும்பாடுபட்டு திடீரென்று நம்மை விட்டு மறைந்து விட்ட மாவீரன். எனவே "ஆலந்தூர் சாலை'' மேம்பாலத்திற்கு "ஆலந்தூர் ஆப்ரகாம் மேம்பாலம்'' என்று பெயர் சூட்டுகிறேன்.

மூன்றாவது ஜோன்ஸ் சாலை வாகன சுரங்க ப்பாதைக்கு- அந்த வட்டாரத்திலே மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து என்டைய உயிர் துடிப்பாக வாழ்ந்து மறைந்த தம்பி பவளவண்ணன் பெயரால் "பவளவண்ணன் சுரங்கப்பாதை'' என்று பெயரிடுகிறேன் என்றார் கருணாநிதி.

கூவம் அழகான நதியாக்கப்படும்-ஸ்டாலின்:

முன்னதாக துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையி்ல்,

தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான ஆட்சி எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பாலங்கள், சாலைகள், பூங்காக்கள் என்று மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அண்ணாவின் மறைவிற்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற கலைஞர் 1971ம் ஆண்டு அப்போது ஜெமினி சர்க்கிள் என்று அழைக்கப்பட்ட, தற்போதைய அண்ணா சாலையில் பெருமை மிகுந்த அண்ணா மேம்பாலத்தினை கட்டத் தொடங்கி 1973ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

திமுக ஆட்சி இல்லாத காலகட்டங்களில் குறிப்பிடும் படியான பாலங்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக சென்னையில் ஒரு பாலம் கூட அதிமுக ஆட்சியில் கட்டப்படவில்லை.

சென்னையில் மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தொடர்ந்து பலப் பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. பெரம்பூர் மேம்பாலம், மணியக்கார சத்திரத் தெருவில் சுரங்கப்பாதை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மேம்பாலம், பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸ் மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம், கொருக்குப்பேட்டை ரெயில்வே வாகன சுரங்கப்பாதை, தங்கச்சாலை சந்திப்பில் மேம்பாலம், வியாசர்பாடி-கணேசபுரத்தில் மேம்பாலம் ஆகிய பாலங்கள் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.

358 ஏக்கரில் அடையாறு பூங்கா ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுவருகிறது. ரூ.19 கோடி செலவில் 58 ஏக்கரில் முதல் கட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் 2010ல் அடையாறு பூங்கா திறந்து வைக்கப்படும்.

முதல்வரின் கனவுத் திட்டமான கூவத்தை தூய்மைப்படுத்தும் பணி நிறைவேற்றிட உறுதியுடன் செயல்படுவோம் என்றார் ஸ்டாலின்.

பின்னர் புதிய பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதையை முதல்வர் கருணாநிதி காரில் சுற்றிப் பார்த்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X