ரத்தாகிறதா விடியல் போன்ற இலவசப் பேருந்து திட்டம்? கேரளாவின் புதிய அரசு முன்பு 4 முக்கிய சிக்கல்கள்!
சென்னை: தமிழகத்தின் மகளிர் விடியல் பயணம் திட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, கேரளாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் அரசு, தனது தேர்தல் வாக்குறுதியான "இந்திரா கியாரண்டி" திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஜூன் 15 முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது கேரளாவின் ஏற்கனவே நலிவடைந்துள்ள பொதுப்போக்குவரத்து கட்டமைப்பில் பெரும் சவால்களையும், அரசியல் சூறாவளியையும் உருவாக்கியுள்ளது. என்னாச்சு?
பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை ஜூன் 15 முதல் அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.. கேரள மாநில அரசுப் போக்குவரத்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-யை நம்பி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டாலும், களத்தில் நிலவும் எதார்த்தம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடியல் இலவச பேருந்து பயண திட்டம்
இப்போது கே.எஸ்.ஆர்.டி.சி சுமார் 4,000 பஸ்களை மட்டுமே இயக்கி வருகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு பேருந்துகள் 15 ஆண்டுகள் பழமையானவை என்பது அரசின் சேவையின் தரத்தையும், பொருளாதாரத் திறனையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
தினசரி வருவாயில் சுமார் 4 கோடி ரூபாயை பெண் பயணிகளே ஈட்டித் தரும் சூழலில், இந்த இலவசத் திட்டத்தால் கே.எஸ்.ஆர்.டி.சி-யின் வருவாய் பெருமளவு சரிந்து, அரசு கஜானாவை மேலும் அதிகமாய் சார்ந்திருக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசு மானியத்தைப் பெற்று வரும் கே.எஸ்.ஆர்.டி.சி, இந்த அறிவிப்பால் பெரும் நிதிச் சுமையை எதிர்கொள்ள உள்ளது.
3 மடங்கு அதிகமான பஸ்கள்
கேரள மாநில சாலை போக்குவரத்தை பொறுத்தமட்டில், அரசு பேருந்துகளை விட மூன்று மடங்கு அதிகமான பஸ்களை தனியார் நிறுவனங்களே இயக்கி வருகின்றன. இவ்வளவு பெரிய பொதுப்போக்குவரத்தை தாங்கிப் பிடிக்கும் தனியார் துறைக்கு அரசு எவ்வித நிதி உதவியும் வழங்குவதில்லையாம்.
மாறாக, அதிகப்படியான வரிகள் மற்றும் அபராதங்களை எதிர்கொள்ளும் அவர்கள், இப்போது அரசின் இந்த இலவசப் பயண அறிவிப்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புள்ளிவிவரங்களின்படி, தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளில் சுமார் 60 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற சலுகை அறிமுகப்படுத்தப்படும்போது, இந்த பெண் பயணிகள் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால், தங்களின் வருவாய் பாதியாகக் குறையும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜுன் 15 தேதிக்குள் கிளியர் ஆகுமா
ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு மற்றும் இதர கட்டணங்களால் திணறி வரும் தனியார் பேருந்து சேவை, இந்த பாரபட்சமான அறிவிப்பால் நஷ்டத்தில் மூழ்கி, இறுதியில் சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்று உரிமையாளர்கள் கதிகலங்கி போயிருக்கிறார்களாம்.
ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஜூன் 15ம் தேதிக்குள் இதற்கான உரிய தீர்வை அரசு காண வேண்டும் என்று அவர்கள் கெடு விதித்திருக்கிறார்கள்..
ஒருவேளை தங்களின் கோரிக்கைகளை அரசு கவனிக்கத் தவறினால், பேருந்து சேவைகளை முற்றிலுமாக நிறுத்தும் போராட்ட முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை, அரசுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது.
ரத்தாகிறதா இலவசப் பஸ் பயண திட்டம்
சமூக நலத்திட்டமாக முன்வைக்கப்படும் இந்த இலவசப் பயணம், கேரளா போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துத் துறையைச் சீரமைக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு, பொதுமக்களின் நலனுக்கும், அதே சமயம் பல தசாப்தங்களாகத் தங்களை நம்பி இருக்கும் தனியார் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் இடையே எப்படியான சமநிலையை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் தற்போது கேரளாவில் எழுந்துள்ள முக்கிய கேள்வி.
இனி வரும் நாட்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளதால், அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கேரள போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும்... என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications