திக்குமுக்காடிப்போன அமீரகம்.. ஒரே நாளில் 10,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது! பெரும் வியப்பு
துபாய்: ஐக்கிய அமீரகத்தில் இப்போது முதல்முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய தினம் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றே சுமார் 10,000 பேர் இந்த ரயிலில் பயணித்தாக கூறப்படுகிறது. இது அமீரகத்தின் பொது போக்குவரத்தையே மொத்தமாக மாற்றிக் காட்டும் எனத் தெரிகிறது.
ஐக்கிய அமீரகத்தில் அதிகளவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு பெரும்பாலும் மக்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே அங்குப் பொதுமக்களின் பயணத்தை மாற்றும் வகையில் புதிதாக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் சேவை
ஐக்கிய அமீரகத்தில் பொது போக்குவரத்தில் இப்போது ஒரு முக்கியமான மாற்றமாக இது வந்துள்ளது. அதாவது அந்நாட்டின் அரசு சார்பில் 'எதிஹாத் ரயில்' (Etihad Rail) இன்று ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அங்கு மக்களிடையே மிகப் பெரிய ஆதரவு இருக்கிறதாம். இதன் காரணமாகவே சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் டிக்கெட்களை வாங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக புஜைரா (Fujairah) மற்றும் அபுதாபி (Abu Dhabi) ஆகிய நகரங்களுக்கு இடையே ரயில் இயக்கப்பட்டது. பொதுமக்கள் ஆதரவு அதிகமாக இருந்ததால் முதல் நாளான இன்று மொத்தம் ஆறு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இன்று அதிகாலை 5:34 மணிக்கு புஜைரா நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதலாவது ரயில், காலை 7:19 மணிக்கு அபுதாபியில் உள்ள முகமது பின் சயீத் சிட்டி நிலையத்தை வந்தடைந்தது.
முதல் நாளே ஹிட்
இன்று இந்த ரயிலில் பல நூறு பேர் பயணித்தனர். அந்த ரயில் தொழில்நுட்ப வசதிகளுடன் அதிநவீன சேவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் என இல்லை. முன்கூட்டியே புக் செய்தவர்கள் மட்டுமே இந்த ரயில்களில் பயணிக்க முடியும். அத்துடன் பயணிகள் தங்களது பயணத்தின் போது தடையின்றி இணையத்தைப் பயன்படுத்த இலவச வைஃபை வசதியும், ஒவ்வொரு இருக்கையின் அருகிலும் பிரத்தியேக சார்ஜிங் சாக்கெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்களின் உடைமைகளை எடுத்துச் செல்லக் கூடுதல் இடவசதியும் உள்ளது.
இது தொடர்பாக எதிஹாத் ரயிலின் சிஓஓ அஸ்ஸா அல்சுவைதி (Azza Alsuwaidi) கூறுகையில், "நாட்டின் ஒவ்வொரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கும் இரண்டு முக்கிய நாட்கள் உள்ளன. ஒன்று திட்டத்தின் கட்டுமானம் தொடங்கும் நாள். மற்றொன்று மக்கள் அதைப் பயன்படுத்தத் தொடங்கும் நாள். இந்த திட்டத்தில் இரு நாட்களும் வெற்றிகரமாக அமைந்தது. புஜைராவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட இந்த ரயில் வரலாற்றில் முக்கியமானது" என்றார்.
நடவடிக்கை
பயணிகளின் வருகையை நிர்வகிக்க அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் எதிஹாத் ரயில் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.. இதன் மூலம் ரயிலில் இருந்து இறங்கி அபுதாபியில் எந்தவொரு பகுதிக்கும் எளிதாகச் செல்ல முடியும். இதன் மூலம் ரயிலில் இருந்து இறங்கியவுடன், பேருந்துகள், டாக்சிகள் அல்லது இதர போக்குவரத்து வசதிகள் மூலம் தேவையான இடத்திற்குச் செல்லலாம்!
இது தொடர்பாகப் போக்குவரத்து மையத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா ஹமத் அல் கஃபிலி பேசுகையில், "பயணிகள் ரயிலில் இருந்து இறங்குவதோடு அவர்களின் பயணம் முடிந்துவிடுவதில்லை. அவர்கள் சென்று சேரும் இடம் வரை அது தொடரும். இதற்காக அபுதாபியின் பிற போக்குவரத்துடன் ரயிலை இணைக்கிறோம். இதன் மூலம் மக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாகச் செல்ல முடியும்" என்றார்.
டிக்கெட் எடுப்பது எப்படி?
முதல் நாளிலேயே 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ள நிலையில், வரும் நாட்களுக்கான பயண முன்பதிவுகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிஹாத் ரயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாக டிக்கெட்டுகளை நேரடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.














Click it and Unblock the Notifications