விஸ்வாசத்துக்கு விலாசம்.. கேமரா முன் வந்த ஜான் ஆரோக்கியசாமி! விஜய் போட்டு வைத்திருக்கும் மெகா ப்ளான்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நீண்ட காலமாக தன்னுடன் பயணித்தவர்கள், நம்பிக்கைக்குரிய நிர்வாகிகள் மற்றும் விசுவாசமாக இருந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதில் விஜய் தனி கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி பெயர் அடிபடுகிறது. அதனால் தான் ஐயூஎம்எல் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜான் ஆரோக்கியசாமி முதன்முதலாக பொதுவெளிக்கு வந்துள்ளார் என்கின்றனர்.
அரசியல் களத்தில் நேரடியாக அதிகம் தென்படாத ஜான் ஆரோக்கியசாமி, கடந்த சில நாட்களாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பின்னால் விஜய்யின் நீண்டகால அரசியல் திட்டம் இருக்கிறது என்கின்றனர் தவெகவினர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆட்சியை அமைத்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது கட்சியை மேலும் வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்புடன் சேர்த்து கட்சி நிர்வாகத்தையும் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் செயல்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக
அதன் ஒரு பகுதியாக, தன்னுடன் நீண்ட காலமாக இருந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விஜய்யின் கார் ஓட்டுநராக இருந்த ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் வெற்றி பெற்று தற்போது சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி கொறடாவாக செயல்பட்டு வருகிறார். அதேபோல், விஜய்யின் மேலாளராக இருந்த ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.
விஜய்
டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவும் நியமிக்கப்பட்டார். இதுபோன்ற நியமனங்கள் மூலம் தனக்கு நெருக்கமானவர்களை பொறுப்பில் அமர்த்தும் பாணியை விஜய் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இந்த சூழலில்தான் ஜான் ஆரோக்கியசாமியின் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுவரை பெரும்பாலும் திரைமறைவிலேயே செயல்பட்டு வந்த அவர், தற்போது பொதுவெளியில் தொடர்ந்து தோன்ற ஆரம்பித்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி
தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் ஜான் ஆரோக்கியசாமியும் நேரில் சென்று வருகிறார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தபோதும் அவர் நேரில் சென்றார்.
முழுநேர அரசியல்வாதி
இதுவரை ஊடக வெளிச்சத்தை தவிர்த்து வந்த ஜான் ஆரோக்கியசாமி, தற்போது தொடர்ந்து செய்திகளில் இடம்பெறுவது சாதாரண நிகழ்வாக பார்க்கப்படவில்லை. கட்சிக்குள் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படுவதற்கான முன்னோட்டமாகவே இது இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வழக்கமாக எளிய உடையிலும் முகக்கவசத்துடனும் பொதுவெளியில் தோன்றும் பழக்கமுடைய ஜான் ஆரோக்கியசாமி, தற்போது முழுநேர அரசியல்வாதி போல வெள்ளை சட்டை அணிந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி கிழக்கு
இதற்கிடையில், விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜான் ஆரோக்கியசாமியை களமிறக்குவது குறித்து தமிழக வெற்றிக் கழக உயர்மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தேர்தல் வியூகங்களை வகுப்பதில் அனுபவம் பெற்ற அவர், நேரடியாக தேர்தல் அரசியலிலும் களமிறங்கினால் அது கட்சிக்கு உற்சாகத்தை அளிக்கும் என விஜய் நினைக்கிறாராம்.
இடைத்தேர்தல்
2026 சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இடைத்தேர்தல்களிலும் அதே வெற்றியை தொடர வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாக உள்ளார். அதற்காக வலுவான வேட்பாளர்களை களமிறக்குவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜான் ஆரோக்கியசாமி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரா? கட்சியில் அவருக்கு முக்கிய அமைப்புப் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications