முதல் தாளில் 111 மதிப்பெண், 2ம் தாளில் '0'.. உதவி பேராசிரியர் முறைகேடு புகார்.. டிஆர்பி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவில் மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எழுப்பிய புகாரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்னர். அதில் எந்த தவறும் நடைபெறவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் சார்பில் விளக்ககம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த டிசம்பர் மாதம் தேர்வு நடந்தது. மொத்தம், 42,064 பேர் தேர்வு எழுதினர். கடந்த பிப்ரவரியில், ஐந்து பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள் வெளியாகி இருந்தது. மீதமுள்ள, 56 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியது. இந்த தேர்வில், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடிகள் நடந்திருப்பதாக தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி, யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் தங்கராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.

TRB scam

இதுபற்றி உதவி பேராசிரியர் தேர்வில், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவின்படி, பணி நியமன ஆணை பெற்ற ஐந்து பேரில், இருவரின் பணி அனுபவ மதிப்பெண்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒரு தேர்வரின் பணி, அனுபவ மதிப்பெண் சான்றிதழ் சரி பார்ப்புக்கு முன், 11 ஆக இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 13 ஆக உயர்ந்தது. அதேபோல, மற்றொருவருக்கு, பணி அனுபவ மதிப்பெண், பூஜ்ஜியத்தில் இருந்து, 15 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், கட்டுரை வினாக்களுக்கு பதில் அளித்தவர்களுக்கு, 50க்கு பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு 50க்கு 49 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாக்களுக்கு, விடைக்குறிப்பு ஏதும் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றார்

இதேபோல் தமிழ்நாடு அரசு கலைக்கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமாரும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் கூறும் போது, கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வில், தாள் 2ல், ஒரு கேள்விக்கு 10 மதிப்பெண் வீதம் 5 கேள்விகளுக்கு, 50 மதிப்பெண்கள் இடம் பெற்றன. தி.மு.க., ஆட்சியாளர்கள், பண விளையாட்டை காட்டவே, இப்படி மதிப்பெண்கள் உருவாக்கப்பட்டன. அதில், சிலருக்கு 49, சிலருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு தேர்வர், முதல் தாளில், 150க்கு 111 மதிப்பெண் பெறுகிறார். ஆனால், கட்டுரை பகுதியில், அவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு, 49 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு, ஒற்றை இலக்க மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன. பணம் தந்து ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு, மதிப்பெண் வாரி வழங்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது" இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் , அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 'ஆசிரியர் தேர்வு வாரியம்,' கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ் -முதல் தாளில் ஒருவர் 150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் -இரண்டாம் தாளில் 50க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருவர் தமிழ்-முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது போல பலருக்கு நடந்துள்ளது. பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது.

இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கே இன்னும் விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சில தேர்வர்களின் மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

ஆங்கிலப் பாட உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலில், சில இடங்களில் நீலம், சில இடங்களில் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தேர்வர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஐயங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் போக்க வேண்டும்.

இதே பணிக்கான போட்டித் தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் அம்பலப்படுத்தியது. உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளில் முதல் தாளில் அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவர், இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுப்பதும், முதல் தாளில் 54, அதாவது 36% மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98% மதிப்பெண் பெறுவதும் சாத்தியமற்ற ஒன்றாகும்.

உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுவது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அழகல்ல. ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வுகளை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் அவற்றில் குளறுபடிகள், முறைகேடுகள் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்" என்றார்.

இதனிடையே அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான நடத்தப்பட்ட தேர்வில் எந்த தவறும் நிகழவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் அருண்ராயை நேற்று சந்தித்து விளக்கமளித்துள்ளார். அவரின் விளக்கத்தை கேட்டுக்கொண்ட உயர்கல்வித்துறை செயலாளர், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

அதே நேரம் ஆங்கிலம், தமிழ் போன்ற பாடங்களுக்கான முடிவுகளில் குறிப்பிட்ட பதிவு எண்கள் பல வண்ணங்களில் அடிக்கோடு இடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இணையதளத்தில் அதிகமான பக்கங்களை பதிவேற்றம் செய்யும்போது, அடையாளத்திற்காக குறிப்பிட்ட பக்கங்களில், பல வண்ணங்களில் அடிக்கோடு இடப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளனர்.

எனினும் விடைத்தாள் மதிப்பீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறும் தேர்வர்கள், மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும், தேர்வர்களின் விடைத்தாள்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+