2017ம் ஆண்டு டிஆர்பி நடத்திய தேர்வில் மிகப்பெரிய முறைகேடு எப்படி நடந்தது? அமலாக்கத்துறை விளக்கம்
சென்னை: 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் கடந்த 23ம் தேதி அன்று சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள 21 வளாகங்களில் நடந்த சோதனை குறித்தும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 1.33 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகள் வெளியான போது, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டினர். சிலருடைய மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்தப்பட்டதாகவும், பணம் பெற்றுக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
ஆசிரியர் தேர்வு வாரியம் புகார்
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் உமா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், தேர்வுக்கான விடைத் தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களைத் தயாரித்த டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பது தெரிய வந்தது.
போலீசார் வழக்கு
இதையடுத்து, தேர்வில் முறைகேடு செய்ததாக 156 பேருக்கு எதிராக 2017ம் ஆண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த முறைகேட்டில் தரகர்கள், டேட்டா என்ட்ரி நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என 19-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
50 கோடி மோசடி
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகவும், மொத்தமாக ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகை கைமாறி இருக்கலாம் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் இறங்கினார்கள்.
அமலாக்கத்துறை சோதனை
இது தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 18 இடங்களில் கடந்த ஜூன் 23ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் கொளத்தூர் விநாயகபுரம் சிவாஜி நகரில் உள்ள ரகுபதி, பெரவள்ளூர் எஸ்ஆர்பி காலனியில் உள்ள விநாயகமூர்த்தி, மேற்கு அண்ணா நகர் 5-வது தெருவில் வசிக்கும் செந்தில் குமார், புதுப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது இஸ்மாயில் ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. சென்னை தவிர மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள 21 வளாகங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனை முடிவுகள் குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பணமோசடி வழக்கு
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வுக்கான OMR விடைத்தாள்களில் முறைகேடு மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA), 2002 விதிகளின் கீழ், சென்னை அமலாக்கத்துறை மண்டல அலுவலகம் 23.06.2026 அன்று சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள 21 வளாகங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
பாலிடெக்னிக் மோசடி எப்படி நடந்தது
கடந்த 2017-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையைத் தொடங்கியது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு முடிந்து விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணியின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறுதி விடைக்குறிப்புக்கு மாறாக, தாங்கள் தேர்ந்தெடுத்த சில வேட்பாளர்களின் மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் திருத்தி உயர்த்தியதாக அந்த FIR-இல் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதே வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட 385 கூடுதல் OMR விடைத்தாள்களைத் தயார் செய்துள்ளனர்.
262 பேர் வெற்றி பெற்றனர்
இதன் விளைவாக, தகுதியற்ற 262 வேட்பாளர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்குத் தகுதி பெற்றது போல மோசடியாகக் காட்டப்பட்டனர். பொதுமக்களின் மனுக்கள் மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, மறுமதிப்பீடு செய்யப்பட்டு, முறைகேடான முடிவுகள் வாபஸ் பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை 2021-லும், இரண்டாவது குற்றப்பத்திரிகை அக்டோபர் 2023-லும் தமிழ்நாடு காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.
16 லட்சம் பணம்
அமலாக்கத்துறையின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட வி. சுப்பிரமணியன் மற்றும் அவரது கூட்டாளி திரு. சுரேஷ் பால் ஆகியோர், 'மெசர்ஸ் டேட்டாடெக்' நிறுவனத்தின் தொழில்நுட்பப் பணியாளர்களின் (ஷேக் தாவூத் நாசர் மற்றும் ஐ. ரகுபதி) உதவியோடு, 2017-ல் தேர்வு செயல்முறையை சீர்குலைக்க சதி செய்தது தெரியவந்தது. இடைத்தரகர்கள் மற்றும் முகவர்களின் நெட்வொர்க் மூலம், அவர்கள் தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களைக் குறிவைத்து, ஒருவரிடமிருந்து தலா ரூ. 14 முதல் 16 லட்சம் வரை ரொக்கமாகப் பெற்றுள்ளனர். இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணம் போலிக் கணக்குகள் மற்றும் பினாமி நிறுவனங்கள் (டிரஸ்ட் எண்டர்பிரைசஸ், விஸ்டம் எண்டர்பிரைசஸ் மற்றும் சூரியம் எண்டர்பிரைசஸ்) மூலமாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கணக்குகள் மூலமாகவும் மாற்றப்பட்டு, பின்னர் அசையா சொத்துக்களாகவும், நகைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

சோதனையில் கிடைத்து என்ன
இந்த ஊழலின் மூலம் ஈட்டப்பட்ட குற்றப் பணத்தை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு அமலாக்கத்துறை இந்தச் சோதனைகளை நடத்தியது. சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களால் சேகரிக்கப்பட்ட ரொக்கப் பணம் குறித்த பதிவுகள், வேட்பாளர்களின் OMR விடைத்தாள்களின் கார்பன் பிரதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள்/முகவர்களிடம் வைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசுத் தேர்வுகளின் விடைத்தாள்கள், வேட்பாளர்களுக்குச் சொந்தமான பல்வேறு சான்றிதழ்களின் நகல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட பல திடுக்கிடும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 13.18 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை விளக்கம்
56 வங்கி கணக்குகள் மற்றும் 2 டிமேட் ணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் பெயர்களில் உள்ள, வழிகாட்டு மதிப்பு சுமார் ரூ. 9.67 கோடி (இதன் சந்தை மதிப்பு ரூ. 20 கோடிக்கும் அதிகமாக இருக்கும்) கொண்ட 36 அசையா சொத்துக்களின் ஆவணங்கள்/விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications