7 இல்லப்பா 12.. தமிழக அரசியலை புரட்டிப் போடும் மினி சட்டசபை தேர்தல்! விஜய் போட்ட ’மாஸ்டர்’ ப்ளான்!
சென்னை: தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு மினி சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போகிறது. ஏற்கனவே 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் சில தொகுதிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்யப்போகிறார்களாம். இதனால் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன. இதற்கான காய்களை விஜய் திட்டமிட்டு நகர்த்தி வருகிறார் என்கின்றனர் தவெகவினர்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் அரசு அமைந்தது.

அரசு பொறுப்பேற்ற பிறகு அரங்கேறும் நிகழ்வுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் அக்கட்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
இடைத்தேர்தல்
விராலிமலை தொகுதியைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், கரூர் தொகுதியைச் சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு முன்பே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோரும் பதவி விலகியிருந்தனர். இதனால் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்திருப்பதால், அந்த இடங்களில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தவெக
இந்த சூழலில், காலியாக உள்ள தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை களமிறக்க தமிழக வெற்றிக் கழகம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தவெக வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், அதிமுகவில் இருந்து விலகிய சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடக்கூடும் என்றும் பேசப்படுகிறது.
அதிமுக
அதோடு மட்டுமல்லாமல், வட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சில அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலகும் சூழல் உருவாகலாம் என்றும், அப்படி நடந்தால் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 12 ஆக உயரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், திமுகவில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களுடனும் மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எதிர்க்கட்சிகள்
அவர்கள் பதவி விலகினால், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற ஊகங்களும் பரவி வருகின்றன. அரசியல் நோக்கில் பார்க்கும்போது, இடைத்தேர்தல்கள் தவெக ஆட்சிக்கு முக்கியமான சோதனையாகவே பார்க்கப்படுகிரது. தவெக தனது மக்கள் ஆதரவை மீண்டும் நிரூபிக்கும் வாய்ப்பாக இதை பார்க்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் முன் மதிப்பீடு செய்யும் தேர்தலாகவே அணுகுகின்றன.
பெரும்பான்மை
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பாமல் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் இலக்கை நோக்கி திட்டமிடலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பனையூர் வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி, இடைத்தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை தவெகவில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல்
ஆனால், 12 அல்லது 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா?, மேலும் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவார்களா?, யார் எந்தக் கட்சியில் இணையப்போகிறார்கள்? என்பது போன்ற அனைத்து தகவல்களும் தற்போது யூகங்களாக மட்டுமே உள்ளன. எனவே, அடுத்த சில நாட்களில் அரசியல் களத்தில் ஏற்படும் மாற்றங்கள் இதனை உறுதி செய்யும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications