இரண்டும் பெரிய திமிங்கலமாச்சே! மகாபலிபுரத்தை மலைக்க வைக்கும் அதிமுக மாஜிகள்! ஜூலை 2ல் தளபதி கச்சேரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஜூலை 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கரூர் - புதுக்கோட்டை அதிமுக மாஜி நிர்வாகிகள் மிகப் பிரம்மாண்டமாக செய்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி. விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை தொகுதியில் 2021 மற்றும் 2026ல் மீண்டும் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

AIADMK

அவரது இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரும் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இருவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி விஜயபாஸ்கர்

அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, ஜூலை 2-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட ஏற்பாடு

இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த இரு முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்களும் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் பேருந்துகளில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை மகாபலிபுரத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல்

மேலும், கட்சியில் இணையும் நிகழ்ச்சிக்குப் பிறகு இரு முன்னாள் அமைச்சர்களும் முதலமைச்சர் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் உட்கட்சி மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருவது கட்சித் தலைமைக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

எம் ஆர் விஜயபாஸ்கர்

ஏற்கனவே பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகிய நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களும் விலகுவது அதிமுகவின் வலிமையை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகக் கருதப்படும் எம்.ஆர். விஜயபாஸ்கரின் அரசியல் முடிவு, கரூர் பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள்

அதேபோல் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சி. விஜயபாஸ்கருக்கு இருக்கும் ஆதரவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூடுதல் பலமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிமுகவில் இருந்து மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகத் தயாராக இருப்பதாகவும், அதுகுறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களும் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+