டெக்சாஸ்-இந்திய அமெரிக்கருக்கு 12 ஆண்டு சிறை
ஹூஸ்டன்: சட்டவிரோதமாக மருந்துகளை இணையதளம் மூலம் விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த இந்திய அமெரிக்கருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெக்சாஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெக்சாஸ், ஏர்லிங்டனில் வசிப்பவர் இந்திய அமெரிக்கரான ராகேஷ் ஜோதி சரண். வயது 47. இரண்டு மருந்து விற்பனை கம்பெனிகளை நடத்திவந்த இவர், 23 பார்மஸி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.
இவர் ஐந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட அபாயகரமான மருந்து வகைகளை சட்டவிரோதமாக விற்று 200 மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளனர்.
அரசால் வரையறுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அடிக்டிவ் மருந்துகள் மற்றும் பெயின் கில்லர் போன்ற மாத்திரைகளை போலி ஆவணங்கள் மூலம் மருந்து கம்பெனிகளிடம் இருந்து வாங்கி, அவற்றை 4 மடங்கு அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மருத்துவமனை, சிறைச்சாலை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு தேவை என போலி ஆவணங்களை தயாரித்து மொத்த விற்பனையாளர்களிடம் காட்டியும் இவர் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளார்.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக் கூடாத இந்த மருந்துகளை தனது மருந்து குடோன்களில் தேக்கி வைத்தார் சரண். பின்னர் இணையதளத்தில் 'ஸ்டோர் ஃபிரன்ட்' என்ற பெயரில் கடைவிரித்து கேட்பவர்களுக்கெல்லாம் இந்த மருந்துகளை அநியாய விலைக்கு விற்றுள்ளார்.
தூக்க மாத்திரை உள்ளிட்ட அபாயகரமான, குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படும் மருந்துகளை எல்லாம் இவர் பாகுபாடின்றி எல்லோருக்கு விற்று பணம் சேர்த்துள்ளார்.
சரண் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கூடவே 68 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளுக்கு 11 மாதத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரண் வீட்டிலிருந்து ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ரொக்கமாகவும், 3.75 லட்சத்துக்கு மேல் வங்கிக் கணக்கிலும், 4 லட்சத்திற்கு மணியார்டர், காசோலை போன்றவையும் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications