காங். தேசிய நிர்வாகிகள் விரைவில் மாற்றம்
டெல்லி: வரும் புத்தாண்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு பல புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் இந்த நியமனங்கள் இருக்கும் என தெரிகிறது.
காங்கிரஸ் கமிட்டியில் பொறுப்பு வகித்த குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், பிருத்திவிராஜ் சவான், நாராயணசாமி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
குலாம்நபி ஆசாத், தமிழ்நாடு, ஒரிசா மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர்களாவும், முகுல் வாஸ்னிக் ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களின் பொறுப்பாளர்களாவும் உள்ளனர். இதேபோல அரியானா மற்றும் காஷ்மீர் பொறுப்பாளராக சவானும், வீரப்ப மொய்லி ஆந்திர காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இரட்டை பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
மேலும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சி.பி.ஜோஷி, ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இரட்டை பொறுப்பில் உள்ளனர்.
முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆஸ்கார் பெர்னாண்டர்ஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது, காங்கிரஸ் கட்சியில் 9 பொதுச் செயலாளர்கள் உள்ளனர். நிர்வாகிகள் மாற்றத்திற்கு பிறகு பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கை 12ஆக உயரக்கூடும் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் 125 ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி, கட்சியின் அமைப்பு தேர்தல்களையும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications