ராஜ் தாக்கரே பாணியில் தெலுங்கானா நவ நிர்மான் சேனா!
ஹைதராபாத்: மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா பாணியில், தெலுங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்கக் கோரி போராடுவதற்காக தெலுங்கானா நவ நிர்மான் சேனா என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறதாம்.
இதனால் தெலுங்கானா பகுதியில் வாழும் குறிப்பாக ஹைதராபாத்தில் வாழும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தாக்கப்படக் கூடும் என்று பீதியடைந்துள்ளனர்.
பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்த காவல்நிலையங்கள், எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும்படியும், விழிப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனவாம்.
ஆந்திர மாநில உயர்நீதிமன்ற வக்கீல்களில் ஒரு பிரிவினர்தான் இந்த புதிய அமைப்பைத் தொடங்கவுள்ளனர்.
தெலுங்கானாவுக்கு எதிரானவர்களை இந்த அமைப்பு கண்டிக்கும், தண்டிக்கும் என அவர்கள் கூறியுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத்தில், டிராவல்ஸ் நடத்தி வரும் கே.சுபாகர் (இவர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர் அல்ல) கூறுகையில், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா எப்படியெல்லாம் ரவுடித்தனம் செய்தது என்பதை நாங்கள் அறிவோம். இதனால் எனக்கு தெலுங்கானா நவ நிர்மான் சனா குறித்து பயம் ஏற்பட்டுள்ளது. என்னால் தொடர்ந்து தொழில் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன் என்றார்.
ஆனால் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதற்காக இந்த அமைப்பு தொடங்கப்படவில்லை என்று இந்த அமைப்புடன் இணைந்துள்ள பேராசிரியர் கோதண்டராமன் என்பவர் கூறுகிறார்.
அவர் கூறுகையில், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவின் கொள்கைக்கும், தெலுங்கான நவ நிர்மான் சேனா கொள்கைக்கும் முற்றிலும் வேறுபாடுகள் உண்டு.
எங்களது இலக்கு ஆட்சியாளர்கள் மட்டும்தான். பிழைப்பு தேடி ராயலசீமாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் இங்கு வந்து இருப்பவர்கள் அல்ல. எனவே அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications