கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக்க கோரிக்கை

ஆளாளுக்கு தனி மாநிலம் கோருவது இப்போது சீசனாகி விட்டது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தை தனியாகப் பிரித்து கொங்கு மாநிலமாக்க வேண்டும் என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.
இக்கட்சியின் சார்பில் ஜவுளித்தொழில் பாதுகாப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்தது. மாநாட்டுக்கு கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் ஆர்.தேவராசன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் கட்சி தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
கொங்கு நாடு என்பது தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள 8 மாவட்டங்களை கொண்ட நிலம். இந்த நிலத்தில் உள்ள அனைவரும் கொங்கு நாட்டினர்தான். கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கட்சியை வேளாளக்கவுண்டர்கள் தொடங்கினாலும் கொங்கு நாட்டை சேர்ந்த அனைவருக்காகவும் போராடும் கட்சி என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கொங்கு நாடு விவசாயம், தொழில் என்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தின் 32 மாவட்டங்களின் மொத்த தொழில் மற்றும் வருவாயை கணக்கிட்டால் கொங்கு நாட்டில் உள்ள 8 மாவட்டங்கள்தான் முதல் இடத்தில் உள்ளன.
பனியன் துணிகள் உற்பத்தியில் திருப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அதுபோல் வீட்டு உபயோகப்பொருள் உற்பத்தியில் கரூர், வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோடு, பெட்சீட் உற்பத்தியில் சென்னிமலை என்று முதலிடத்தில் இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 60 சதவீதம் கொங்கு நாட்டில் உள்ள 8 மாவட்டங்கள் அல்லது மேற்கு தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இருந்து அரசுக்கு கிடைக்கிறது. எனவே நாம் அரசிடம் எந்த சலுகையையும் எதிர்பார்க்க வேண்டியது இல்லை. நம் கடுமையான உழைப்பாலும், நேர்மையாலும் வந்ததுதான் இந்த முன்னேற்றம்.
எனவே கொங்கு நாட்டின் வருமான விகிதாச்சார அடிப்படையில் கொங்கு நாட்டின் 8 மாவட்டங்களையும் பிரித்து தனியாக ஒரு மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைக்காக நான் போராடவும், என் உயிரை கொடுக்கவும் நான் தயங்க மாட்டேன். பிறந்தவர் அனைவரும் இறந்தே ஆக வேண்டும் என்பது இயற்கை. ஆனால் இறப்பதற்கு முன்பு என் உயிர் ஒரு நல்ல காரியத்துக்காக போகும் என்றால் என்னுடைய பெயரும் சரித்திரத்தில் இடம் பெறும் என்றார் ராமசாமி.












Click it and Unblock the Notifications