வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்-நெய்வேலியில் சுரங்க பணிகள் பாதிப்பு

வார்ட் புயல் உருவானது முதல் கடலூர் மாவட்டத்தில் 7வது நாளாக கனமழை பெய்து வருகிறது.
முக்கிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.3 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளவு 47.5 அடியாகும். ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டுள்ளதால் ஏரியைக் காப்பாற்ற பெருமளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீர் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்து நெல் பயிர்களை மூழ்கடித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது அறுவடைக்கு வரும் இந்த நெற் பயிர் கதிர்கள் பால் பிடிக்கும் நிலையில் நீரில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
மேலும் பல பகுதிகளில் 110 நாட்களுக்கு முன் பயிரிடப்பட்ட சம்பா நெற் பயிர்களும் கனமழை காரணமாக பெரும் சேதமடைந்துள்ளன.
இது தவிர ஏராளமான பரப்பில் பயிரிடப்பட்ட கரும்பு பயிரும் வெள்ளத்தால் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன.
அதே போல விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள கரும்பு பயிர்களும், மணிலா பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.
இன்றும் பலத்த மழை:
இந் நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான வார்ட் புயல் வலுவிழந்து, தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தமிழகம் முழுவதும் வியாபித்துள்ளது.
இதனால் மேகமூட்டமான சூழல் நிலவுவதோடு அவ்வப்போது மிக பலத்த மழை பெய்து வருகிறது.
மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து தெற்கு ஆந்திர கரையோரப் பகுதி வரை நீண்டு பரவியுள் இந்த தாழ்வு நிலையால் அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனினும் மீனவர்களுக்ள் கடலுக்குள் செல்ல தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
ஆனாலும் பெரும்பாலான மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை.கடலில் அலைகள் பெரிய அளவில் எழுவதால் கடலோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெய்வேலியில் சுரங்க பணிகள் பாதிப்பு:
தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் நெய்வேலியில் சுரங்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 3 திறந்தவெளி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும், 3 அனல்மின் நிலையங்களும் இயங்கி வருகின்றன.
கன மழையால் திறந்தவெளி சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
சுரங்க இயந்திரங்கள் ஒரு இடத்தை வேறு இடத்திற்கு நகர முடியாத அளவுக்கு சுரங்கத்தினுள் சேறும், சகதியுமாகக் காணப்படுவதால், சிறப்பு சுரங்க இயந்திரங்களின் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் தேங்கியுள்ள நீரை ராட்சத பம்புகளைக் கொண்டு வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணியும் தடைபட்டுள்ளது.
இருப்பினும், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி தொடர்ந்து
நடைபெற்று வருவதால் மின்தடைக்கு வாய்ப்பில்லை.
மயிலாடுதுறையில் 150 மிமீ மழை:
மாநிலத்திலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறையில் தான் நேற்று 150 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக வல்லத்தில் 140 மிமீ மழை பெய்துள்ளது.
சென்னையில் கன மழையால் 15க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மெரீனா, பெசன்ட் நகர், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் மழை விடாமல் நீடித்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நீலகிரி நிலச்சரிவு நிவாரணம்-கூடுதலாக ரூ.25 கோடி:
இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக ரூ. 25 கோடி நிதியை ஒதுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சேதமடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காகவும், மின்சார அமைப்புகளை செப்பனிடுவதற்காகவும், தோட்டக்கலைத் துறை, நகர பஞ்சாயத்து துறை, குன்னூர் நகராட்சி, உதகமண்டலம் நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றின் மூலம் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications