இந்தோனேசியாவில் தவித்து வரும் 78 தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து

இதை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியா அரசு, இந்த அகதிகளை எங்கு தங்க வைப்பது என்பதை ஐ.நா. அகதிகள் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 78 தமிழர்கள் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி படகில் புறப்பட்டனர். அவர்களை நடு வழியில் தடுத்து நிறுத்திய ஆஸ்திரேலிய குழுவினர், தங்களது ஓசியானிக் வைகிங் என்ற சுங்கத்துறை கப்பலில் ஏற்றி இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு தமிழர்கள் தரையிறங்க மறுத்தனர். தங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது. ஆஸ்திரேலியா அல்லது வேறு நாட்டில் குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் 78 தமிழர்களும் உண்மையான அகதிகள் என ஐ.நா. அகதிகள் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளது. அதேசமயம், இவர்களை எங்கு குடியமர்த்துவது என்பதை அகதிகள் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தீவை மூட ஆம்னஸ்டி கோரிக்கை...
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வருவோரை அந்த நாட்டு அரசு தங்க வைக்கும் கிறிஸ்துமஸ் தீவை உடனடியாக மூட வேண்டும். அங்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில்தான் முகாம் அமைத்து புகலிடம் கோரி வருபவர்களை தங்க வைத்துள்ளது ஆஸ்திரேலியா. அங்கு அதிகபட்ச அளவை அகதிகள் எண்ணிக்கை எட்டியுள்ளதால் பெரும் இட நெருக்கடியும், பிற வசதியின்மையும் நிலவுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஆம்னஸ்டியின் அகதிகள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கிரகாம் தாம் அங்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இங்கு அளவுக்கு அதிகமாக ஆட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.
இங்குள்ள வசதிகள் போதுமானவை அல்ல. இங்கு நீண்ட காலமாக தங்க வைக்கப்பட்டிருப்போர் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications