கலைவாணர் அரங்கம் இடிப்பு-சுவர் விழுந்து வாலிபர் பலி
சென்னை: கலைவாணர் அரங்க இடிப்பின்போது போர்ட்டிகோ உடைந்து விழுந்ததில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள இடம், புதிய தலைமைச் செயலக வளாகத்திற்கு தேவைப்படுவதால் அரங்கம் இடிக்கப்படுகிறது.
இப்பணியில் நேற்று தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது போர்ட்டிகோ ஒன்று பெரும் சப்தத்துடன் இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளர் உள்ளே சிக்கி உடல் நசுங்கி பலியானார்.
அவரது அடையாளம் தெரியவில்லை. அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த நபர் பீகாரைச் சேர்ந்தவர் என்று திருவல்லிக்கேணி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் கூறுகையில், உயிரிழந்த தொழிலாளர் காண்டிராக்டர் ஒருவர் மூலம் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அரசு அவரை நேரடியாக பணியில் அமர்த்தவில்லை.
எனவே அரசு சார்பில் இறந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை எதுவும் வழங்கப்பட மாட்டாது. மாறாக, சம்பந்தப்பட்ட காண்டிராக்டர்தான் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
இதுபோன்ற பணியில் ஈடுபடும்போது அந்தத் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகள் நேரிடும்போது காப்பீட்டுத் தொகையை பெற முடியும்.
இயற்கைச் சீற்றத்தால் இறக்கும்போதுதான் அரசு நிவாரண உதவிகளை வழங்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications