For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் பரிந்துரை- கைவிட்டது காலேஜியம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: நில ஆக்கிரமிப்பு, முறைகேடாக சொத்துக்கள் வாங்கியது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்ற காலேஜியம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

நேற்று மாலை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் காலேஜியத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா, தருண் சாட்டர்ஜி, அல்தாமஸ் கபீர், ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் கூடி விவாதித்தனர். அப்போது தினகரனைப் பரிந்துரை செய்த முடிவை திரும்பப் பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பை இழந்து விட்டார் தினகரன்.

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் முடிவை காலேஜியம் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியது. ஆனால் அதை ஏற்க மறுத்த சட்ட அமைச்சகம், முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு காலேஜியத்திற்கு பரிந்துரைத்திருந்து என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் பி.டி.தினகரனை விரைவில் 'இம்பீச்' செய்வது தொடர்பான நடைமுறைகளை ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி தொடங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தினகரனை இம்பீச் செய்வது தொடர்பான மனுவை அன்சாரியிடம் அளித்துள்ளனர். இதுகுறித்து முடிவெடுக்க 3 பேர் கொண்ட கமிட்டியை விரைவில் அன்சாரி நியமிப்பார். அந்த கமிட்டியில், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு சட்ட நிபுணர் ஆகியோர் இடம் பெறுவர்.

இந்தக் குழு, இம்பீச் செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆலோசித்து முடிவெடுத்து அதை ராஜ்யசபா தலைவருக்குப் பரிந்துரைக்கும்.

அதன் பின்னர் ராஜ்யசபா தலைவர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

மிகவும் துரதிர்ஷ்டவசமானது - தினகரன்

இந்த நிகழ்வுகள் குறித்து பி.டி.தினகரன் கருத்து தெரிவிக்கையில், ராஜ்யசபாவில் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக நான் ராஜினாமா செய்ய மாட்டேன்.

என் மீதான நில ஆக்கிரமிப்பு புகார்கள் தவறானவை, அடிப்படை இல்லாதவை.

எனது குடும்பத்தினர் அளவுக்கு மேல் சொத்துக்களை வாங்கவில்லை, வைத்திருக்கவில்லை.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் அனைத்தும் நடந்து வருகின்றன.

நான் 1996ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியானேன். ஆனால் அதற்கு முன்பிருந்தே எனது சொத்துக்கள் என்னிடம் இருந்து வருகின்றன. அது நான் வருடா வரும் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டர்ன் படிவத்தைப் பார்த்தாலே தெரியும் என்றார்.

தினகரனுக்கு ராஜ்யசபாவில் ஆதரவுக் குரல்:

இந் நிலையில் பி.டி.தினகரன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை குறி வைத்து சிலர் செயல்படுவதாக இரண்டு காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜ்யசபாவில் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நில ஆக்கிரமிப்பு, முறைகேடாக சொத்துக்கள் வாங்கியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் பி.டி.தினகரன். அவர் மீது நடவடிக்கை கோரி ராஜ்யசபாவில் 75 எம்.பிக்கள் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந் நிலையில் இன்று ராஜ்யசபாவில், பூஜ்ய நேரத்தின்போது, பிரவீன் ராஷ்டிரபால், ஜே.டி. சீலம் ஆகிய இரு காங்கிரஸ் எம்.பிக்கள் எழுந்து, தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால்தான் அவரைக் குறி வைத்து சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்றனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X