எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்! மொத்தமா 5 நாட்கள் பேங்க் செயல்படாது.. உஷார் மக்களே!
சென்னை: ஸ்டேட் பேங்க் ஆப் (எஸ்பிஐ) வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். எனவே, வங்கி 5 நாட்களுக்கு செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஊழியர்கள், தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அகில இந்திய எஸ்.பி.ஐ. ஊழியர்கள் கூட்டமைப்பு (AISBISF) இந்த 2 நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

5 நாட்களுக்கு லீவு
இந்த வேலைநிறுத்தத்தால் வங்கிச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும். ஏற்கெனவே, நான்காவது சனிக்கிழமை (மே 23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) என தொடர் விடுமுறைகள் வருவதால், எஸ்.பி.ஐ. கிளைகள், மே 27 அன்று வரும் பக்ரீத் பண்டிகை விடுமுறையையும் சேர்த்து, கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
16 அம்ச கோரிக்கை
அதேநேரம், ஏடிஎம், இணையவழி வங்கிச் சேவை, யோனோ செயலி மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகள் வழக்கம் போல செயல்படும் என எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஊழியர்கள் கூட்டமைப்பு, வங்கி நிர்வாகத்திடம் மொத்தம் 16 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
நிரந்தரப் பணிகளுக்கு வெளி ஆட்களை (Outsourcing) நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான கோரிக்கை. நிரந்தரப் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது, ஊழியர்களின் பணி பாதுகாப்பைக் குறைப்பதோடு, வாடிக்கையாளர்களின் முக்கியத் தரவுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என தொழிற்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
அடிமட்டப் பணியாளர்களான 'மெசஞ்சர்கள்' போன்ற பதவிகளுக்குக் கடந்த 29 ஆண்டுகளாகப் புதிய ஆட்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், வங்கிக் கிளைகளில் போதிய ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களும் இல்லாததால், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டாய நடவடிக்கை
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS), எஸ்.பி.ஐ. ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதிய நிதி மேலாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும். வணிக இலக்குகளை (Targets) அடைவதற்காக, வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயப்படுத்தி காப்பீட்டுத் திட்டங்களை 'திணிக்கும்' வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும் இக்கோரிக்கைகளில் கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications