For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனவரி 6ல் தமிழக சட்டசபை கூடுகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வரும் ஜனவரி 6ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஜூலை 21ம் தேதி வரை நடந்தது.

வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கூட்டம் நடைபெறவில்லை.

6 மாத இடைவெளிக்குள் சட்டசபை கூட வேண்டும் என்பதால் வரும் ஜனவரி 6ம் தேதி தமிழக சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் இந்த கூட்டத் தொடரில் எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார்கள்.

கூட்டத்தொடர் பொங்கல்-தமிழ்ப் புத்தாண்டுக்கு முன் முடிவடையும் என்று தெரிகிறது. எனவே ஒரு வார காலமே சட்டசபை நடக்கும் என்று தெரிகிறது.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப்பேரவை, தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

அவருக்கு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், தலைமைப் பொறியாளர் கருணாகரன் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கட்டட பணிகள் குறித்து விளக்கினர்.

மார்ச்சில் கட்டட பணி முடியும்:

இந் நிலையில் புதிய சட்டசபை கட்டிடம் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாகரன்,

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள 25 ஏக்கர் நிலத்தில் புதிய சட்டசபை கட்டிடமும், தலைமை செயலகமும் கட்டப்படுகிறது. ரூ.425.57 கோடி செலவில் 6 மாடிகள் கொண்ட சட்டசபை கட்டிடம் கட்டும் பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ரூ.160 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இதன் திட்ட மதிப்பு ரூ.279.564 கோடி. தள பரப்பு 7,89,773 சதுர அடி. இதில் 7 கட்டிடங்கள் ஒவ்வொன்றும் தலா 7 மாடிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இந்த கட்டிடங்கள் இணைப்பு நடைபாதை மூலம் இணைக்கப்படும்.

இந்த கட்டிடங்களில் மொத்தம் 30 அரசுத் துறை அலுவலகங்கள் இருக்கும். ஒவ்வொரு தளமும் 8500 முதல் 8875 சதுர மீட்டர் வரை இருக்கும். கட்டிடத்தின் மொத்த உயரம் 34.20 மீட்டர்.

இந்த கட்டிடத்தை வாஸ்கான் என்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டுகிறது. இதன் ஒப்பந்த காலம் 18 மாதங்கள் என்றாலும் நவீன யுக்தி மற்றும் எந்திரங்களை பயன்படுத்தி 15 மாதத்தில் கட்டி முடிக்க முடியும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். 2011 மார்ச் மாதம் இந்த பணிகள் முடியும்.

அரசு பணியாளர் தேர்வாணைய கட்டிடத்தை ஒரு மாதத்தில் காலி செய்வதாக கூறியுள்ளனர். கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டதும் 70 சதவீத இடம் தயாராகிவிடும். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் பழைய கட்டிடம் தானே தவிர தொன்மையான கட்டிடம் அல்ல. அந்த இடத்தில் தான் வரவேற்பு மையம் அமையவுள்ளது.

சுற்றுலா வளர்ச்சி வாரிய அலுவலகம், விருந்தினர் இல்லம், 6 மாடி பழைய எம்.எல்.ஏ. விடுதி கட்டிடங்கள் ஆகியவை இப்போதைக்கு இடிக்கப்பட மாட்டாது. ஆனால் எதிர்காலத்தில் இடிக்கப்படலாம்.

இந்த கட்டடப் பணிகள் முடிந்ததும் புதிய அரசு விருந்தினர் இல்லம், பிரமாண்ட மாநாட்டு அரங்கம், பல அடுக்கு பார்க்கிங் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X