இதில் கலந்தாலோசனை செய்ய ஒன்றுமில்லை-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடல் மீன் தொழில் ஒழுங்கு முறை வரைவுச் சட்டம் குறித்து இந்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சகம் கடந்த 16ம் தேதி ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 12 கடல் மைலுக்குட்பட்ட பகுதி மட்டும்தான் மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. 12 கடல் மைலுக்கு மேல் 200 கடல் மைலுக்கு உட்பட்ட பகுதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட தனி பொருளாதார மண்டலம் ஆகும்.
மேற்படி தனி பொருளாதார மண்டலப் பகுதியில் மீன் பிடிப்பதை ஒழுங்கு முறைப்படுத்தத்தான் கடல் மீன் தொழில் (ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை) சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய அரசு மேற்படி பத்திரிகைச் செய்தியில் தெரிவித்து இருக்கிறது.
மேலும் இது போன்ற சட்டம் இல்லாத சூழ்நிலையில், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வதிலும் மிகுந்த சிரமங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து மீன் வளத்தை பாதுகாக்கப் போகிறோம் என்றும், உள்நாட்டு மீனவ மக்களை அழித்து மீன் ஏற்றுமதியை உயர்த்தப் போகிறோம் என்றும் மத்திய அரசு கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
மக்கள் வளத்திற்கு பிறகுதான் மற்ற வளம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மக்களுக்காக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சட்டங்களை இயற்றி அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது.
தனி பொருளாதார மண்டலத்தில் முறையின்றி மீன் பிடிப்பதை தடுப்பது மற்றும் மீன் வளத்தை பாதுகாப்பது ஆகியவற்றை உறுதி செய்வது தான் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை முற்றிலும் மறந்து இது போன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மீன்கள் நிறைய கிடைக்க வேண்டுமென்றால் நெடுந்தூரம் சென்று பிடிப்பது என்பது தவிர்க்க முடியாதது. இந்த சூழ்நிலையில் 12 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்று சொல்வது அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய செயல் ஆகும். இது போன்ற மத்திய அரசு அறிவிப்பது, பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே விட்டுவிட வேண்டும் என்று சொல்வதற்கு சமம்.
இந்த வரைவுச் சட்டம் குறித்து விரிவான கலந்து ஆலோசனை நடத்தவிருப்பதாக மேற்படி பத்திரிகை செய்தியில் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இது ஒரு கண் துடைப்பு நாடகம்.
இது குறித்து, கலந்தாலேசனை செய்ய ஒன்றுமில்லை. கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு கட்டப்படும் கல்லறைதான் இந்த சட்டம். இந்த சட்டம் கைவிடுவது தான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு.
இந் நிலையில் மேற்படி வரைவு சட்டத்தை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யாததற்கும், இது குறித்து கலந்தாலோசனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்து, கடிதம் அனுப்பிவிட்டார் கருணாநிதி.
கருணாநிதியின் இந்த செயல் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தி விட்டது என்று அறிவித்து, உண்ணாவிரதத்தை 3 மணி நேரத்தில் முடித்துக் கொண்டது போல் இருக்கிறது.
இதிலிருந்து மீனவர்களுக்கு விரோதமான இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த கருணாநிதி எதுவும் செய்யப் போவதில்லை என்பதே தெளிவாகிறது. என்னைப் பொறுத்த வரையில் இந்த வரவு சட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் மீனவ மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான்.
எனவே மீனவர்களுக்கு விரோதமான இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மீனவ மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மீனவர்களின் எதிர்ப்பையும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு இதற்காக பிற கட்சிகளின் ஆதரவையும் அதிமுக கோரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தண்ணீரில் பிழைப்பு நடத்தும் மீனவர்கள் கண்ணீரில் மிதக்க அதிமுக அனுமதிக்காது என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிமுக போராட்டம்!
இந் நிலையில் கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னாள் மீனவளத் துறை அமைச்சர்களான ஜெயக்குமார், கலைமணி, அதிமுக எம்பி மைத்ரேயன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி:
முன்னதாக நேற்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாருக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தில்,
மீன் பிடித் தொழில் ஒழுங்கு முறை மசோதா குறித்து,
தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். மேலும், எனது அறிவுரையை ஏற்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் இந்தப் பிரச்னை குறித்து உங்களிடம் பேசினார்.
இந் நிலையில், இந்த மசோதா குறித்து இறுதி முடிவெடுப்பதற்கு முன்பாக மீனவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். இதற்கு தமி ழக மீனவர்கள் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன். நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படாது எனத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார்.
நாளை மீனவ மக்கள் பெருமளவு வசிக்கும திருச்செந்தூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications