ஜெ. வீட்டை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்
சென்னை: அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் சிங்காநல்லூர் சின்னச்சாமி எம்.எல்.ஏவை நீக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா தொழிற் சங்க மின்வாரிய பிரிவு முன்னாள் பொருளாளர் மோகன் தலைமையில் 35 பெண்கள் உள்பட 100 பேர் போயஸ்கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டை இன்று முற்றுகையிட்டனர்.
சின்னசாமி எம்.எல்.ஏ. ஐ.என்.டி.யூ.சி.யில் இருந்து வந்தவர். இதனால் அண்ணா தொழிற்சங்க பேரவையில் அ.தி.மு.க.வினருக்கு முன்னுரிமை கொடுக்க மறுக்கிறார். சுயநலமாக காங்கிரஸ்காரர்களை ஊக்குவிக்கிறார்.
பேரவையில் இருந்து பொய் குற்றச்சாட்டு சுமத்தி பலரை நீக்குகிறார். அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசியாக 30 வருடமாக இருக்கும் எங்களையும் நீக்கி விட்டார்.
எனவே சின்னச்சாமி எம்.எல்.ஏ.வை தொழிற்சங்க பதவியில் இருந்து நீக்க வேண்டும். உண்மையான தொழிற்சங்க நிர்வாகியை நியமிக்க வேண்டும்.
எங்களுக்கு அவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் முறையிட வந்துள்ளோம் என்றார் மோகன்.
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து புகார் தர வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதனால் போலீஸார் உஷாராக இருந்தனர்.
ஜெயலலிதாவுக்குத் தகவல் போய் அவர் 10 பேரை மட்டும் உள்ளே அனுப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து 10 பேர் உள்ளே சென்றனர். அவர்களை ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சந்தித்து கோரிக்கை மனுவைப் பெர்றுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா உறுதியளித்துள்ளார் என்று அவர் அதிமுகவினரிடம் கூற, அவர்கள் அதை ஏற்று கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications