ஈழ தமிழர்கள் கடல் வழியே சிதம்பரம் வர அனுமதிக்க வேண்டும்- இல.கனேசன் கோரிக்கை
சென்னை: சிதம்பரம் திருவாதிரை திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கையில் வசிக்கும் இந்துக்கள் கடல் வழியாக தமிழகம் வருவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இல கனேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாதிரை திருநாளை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி முதல் சிதம்பரத்தில் 11 நாள் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளது.
திருவாதிரையை முன்னிட்டு இலங்கை இந்துக்கள் சிதம்பரம் வருவது பல்லாண்டு வழக்கம். சிதம்பரத்தில் இவர்கள் கட்டிய மடாலயங்களே இதற்கு சாட்சி.
கடந்த 1992க்கு முன்பு வரை அவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து படகு மற்றும் கப்பல் மூலமாக சிரமமின்றி தமிழகம் வந்து சென்றார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.
தற்போதைய நிலையில் இலங்கையின் வடக்குப் பகுதி தமிழர்கள் கொழும்பு செல்வதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அவர்கள் தமிழகம் வர வேண்டுமானால் கொழும்பிலிருந்து விமானம் மூலமாக மட்டுமே வர முடியும்.
இதற்கு அதிக செலவு மட்டுமல்லாது, பல நடைமுறை சிரமங்கள் உள்ளன. புதிய விடியலுக்காக காத்திருக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு இவ் விஷயத்தை இந்திய அரசும் இலங்கை அரசு கையாள வேண்டும்.
முந்தைய காலங்களில் இருந்ததைப் போல் இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்து படகு அல்லது கப்பல் மூலமாக அவர்கள் இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு வருவதற்கு இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
அவர்கள் அங்கிருந்து சிதம்பரம் செல்ல தேவையான பேருந்து வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். சிதம்பரத்தில் அவர்கள் தங்களது மடாலயங்களில் தங்கி கோயிலுக்கு சென்று வரும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து தர வேண்டும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications