3 வருடத்துக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன்-கத்காரி
நாக்பூர்: கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன். கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கவுள்ளதால், 3 வருடத்திற்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
பாஜக தேசியத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நாக்பூர் வந்தார் கத்காரி. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக தேசியத் தலைவராக நான் பதவி வகிக்கவுள்ள 3 ஆண்டுகளுக்கும், லோக்சபா, ராஜ்யசபா என எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.
எனது திட்டம், வளர்ச்சி அரசியல் மட்டுமே. இதை நான் ஏற்கனவே தெளிவாக்கி விட்டேன். டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்கிறேன். அப்போது கட்சியின் திட்டங்களை தெரிவிப்பேன். தற்போது உள்ள கட்சியின் தேசிய செயற்குழுவை அப்படியே வைத்துக் கொள்ளப் போகிறேன்.
வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களைச் சந்திக்க முடியுமா, பேச முடியுமா, அவர்களைப் போல பெரிய தேசியத் தலைவராக வர முடியுமா என்றெல்லாம் ஒரு காலத்தில் ஏங்கியிருக்கிறேன். இப்போது அவர்கள் அமர்ந்த நாற்காலியில் உட்கார வாய்ப்பு கிடைத்திருப்பதால் சற்றே நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றேன்.
அத்வானி எனக்குக் கூறிய அறிவுரைகளும் அளிக்கும் ஆதரவும் இந்தத் தலைவர் பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது என்றார் கத்காரி.
சிறந்த நிர்வாகி...
பாஜக தலைவராகியுள்ள கத்காரி தேசிய அரசியலுக்குப் புதியவர். மாநில அரசியலியேயே இத்தனை காலமாக இருந்தவர். இருப்பினும் மிகவும் புத்திசாலியான தலைவராக போற்றப்படுபவர். அதை விட முக்கியமாக திட்டமிடலில் மிகச் சிறந்தவர் என்று பெயரெடுத்தவர்.
மகாராஷ்டிராவிலும், மும்பையிலும் இன்று உள்ள பல பாலங்களுக்கு இவர்தான் காரணம். மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்பு பொதுப்பணித்துறை அமைச்சராக கத்காரி இருந்தபோது பாலங்கள் அமைப்பதை ஒரு இயக்கம் போல செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைத்தவர்.
மும்பை - புனே அதி விரைவுச் சாலை இவரது பதவிக்காலத்தில்தான் உருவானது. இதுதவிர மும்பையில் உள்ள பல பாலங்களுக்கும், மகாராஷ்டிராவில் உள்ள பல முக்கியப் பாலங்களுக்கும் இவர்தான் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைவர் பதவிக்கு வருபவர்கள் வழக்கமாக நிச்சயம் ராமர் கோவிலை கட்டி விடுவோம், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை ரத்து செய்ய முயற்சிப்போம் என்று வழக்கமான பாடலைத்தான் பாடுவார்கள். அதே வேகத்தில் ஆர்.எஸ்.எஸ். மார்க்கத்தில் நடை போடத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் அப்படியெல்லாம் வெற்றுத்தனமாக பேசாமல் சற்று நிதானமாக கத்காரி பேசியுள்ளது கவனித்தக்கத்தாகும்.
மேலும் கத்காரிக்கு இருக்கும் நற் பெயர் - கட்சி பாகுபாடின்றி மகாராஷ்டிராவில் அனைவராலும் பாராட்டப்படுபவர் கத்காரி என்பது குறிப்பிடத்தக்கது- பாஜகவுக்கும் நல்லது செய்யும் என்ற நம்பிக்கையும் பாஜகவினர் மத்தியில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications