4 புதிய ரயில் சேவை - நாளை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி நெல்லைக்கு நாளை 2 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர மேலும் 2 புதிய ரயில் சேவையையும் நாளை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் இருந்தபடி வீடியோகான்பரன்ஸ் மூலம் இந்த தொடக்க விழா நடைபெறுகிறது.
பட்ஜெட்டில் அறிவித்தபடி, ஜம்முதாவி- மதுரை இடையே வாரம் இருமுறை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதேபோல, புதிதாக திருநெல்வேலி- பிலாஸ்பூர் இடையே நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும். நாகர்கோவில், திருவனந்த புரம், ஆலப்புழை, போத்தனூர், ஜோலார்பேட்டை, ரேனிகுண்டா வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
அதேபோல ராமேஸ்வரம்- கன்னியாகுமரி இடையே புதிய ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் மதுரை, திருநெல்வேலி வழியாக செல்லும். வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-மங்களூர் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 3 நாட்கள் தற்போது இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தோறும் மங்களூரில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. 8.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு புதுச்சேரி செல்கிறது.
இந்த 4 ரயில் சேவையையும் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார். விழாவில் ரயில்வே இணை மந்திரி அகமது கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications