வாக்காளர்கள் ஓட்டுப் போட பணம் கொடுப்பது சட்டவிரோதமானது - இளங்கோவன்
சென்னை: வாக்காளர்கள் ஓட்டுப் போட கட்சிகள் பணம் கொடுப்பது சட்டவிரோதமானது, கண்டனத்துக்குரியது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
இளங்கோவன் இன்று சென்னையில் தனது 62வது பிறந்த நாளை கேக் வெட்டி தடபுடலாக கொண்டாடினார். அவரது ஆதரவாளர்கள் 62 கிலோ எடையுள்ள கேக்கைக் கொண்டு வந்து வெட்டச் சொன்னார்கள். இளங்கோவனும் அந்தக் கேக்கை வெட்டி ஆதரவாளர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.
பெரும் கூட்டமாக இளங்கோவன் கோஷ்டி காங்கிரஸார் கலந்து கொண்டு அமர்க்களப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் இளங்கோவன். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளாரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன்,
ராமதாஸ் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்பார். பிறகு தைலாபுரத்தை தலைநகரமாக ஆக்க வேண்டும் என்பார். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்றோ, தைலாபுரத்தை தலைநகரமாக்க வேண்டும் என்பதோ தேவையில்லாத ஒன்று.
அதனை ராமதாஸ் விட்டுவிட்டு மக்களின் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தமிழகத்தை நல்ல நிலையில் முன்னிலைப்படுத்த வேண்டும். இதனை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன் என்றார்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து காலம்தான் பதில் சொல்ல முடியும் என்றார்.
இடைத்தேர்தலில் வாக் காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு,
தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வன்முறையில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. அது கண்டிக்கத்தக்கது என்றார்.
பின்னர் தனது பிறந்தநாளை காங்கிரஸார் கொண்டாடுவது குறித்து இளங்கோவன் கருத்து தெரிவிக்கையில், எனது பிறந்தநாளை காங்கிரஸ்காரர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு நான் தகுதி உள்ளவனா என்று தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications