கற்பழிப்பு வழக்கு- நேரில் ஆஜராக அடையாறு சாமியாருக்கு போலீஸ் 24 மணி நேர கெடு

நேற்று தனது உதவியாளர் மூலம் விளக்கத்தைக் கொடுத்து அனுப்பியிருந்தார் ஸ்ரீகுமார். ஆனால் அதை போலீஸார் நிராகரித்து விட்டனர். நேரில் வந்துதான் விளக்கம் அளிக்க வேண்டும் என சாமியாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரை சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மீது தேனாம்பேட்டை கிரியப்பா சாலையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறினார்.
இது குறித்து மாம்பலம் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணாபிரான் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதல் கட்டமாக ஹேமலதாவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றார்.
அப்போது அவர் சாமியார் தனக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும் அதை செல்போன் மூலம் படம் எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறினார். சில ஆதாரங்களையும் போலீசில் ஒப்படைத்தார்.
தொடர்ந்து டிரைவர் ஆனந்தன், வீட்டு காவலாளி, வேளச்சேரியில் உள்ள ஹேமலதாவின் தாய், தந்தை உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாமியாருக்கும், ஹேமலதாவுக்கும் ரகசிய தொடர்பு இருந்தது உறுதியானது.
ஆனால் சாமியார் ஹேமலதாவை பலாத்காரம் செய்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை இன்னும் 2 நாட்களில் போலீசுக்கு கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீஸ் விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி, பதுங்கியுள்ளார். மேலும் தனது உதவியாளரிடம் ஹேமலதாவுக்கு எதிரான ஆதாரங்களையும், தனது தரப்பு விளக்கத்தையும் அவர் கொடுத்து அனுப்பியிருந்தார்.
இதனால் போலீஸார் கோபமடைந்தனர். சாமியாரை போனில் பிடித்த அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் நேரில் ஆஜராக வேண்டியதுதானே என்று கேட்டனர்.
அதற்கு சாமியார் நான் முக்கியமான வேலை விஷயமாக தற்போது டெல்லியில் இருக்கிறேன். வேலையை முடித்து விட்டு 2 நாட்களில் வருகிறேன் என்று பதில் அளித்தார்.
இதைக் கேட்ட போலீஸார், இன்னும் 24 மணி நேரத்தில் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு, ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கெடு விதித்து கடுமையாக உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்றைக்குள் சாமியார் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, டெல்லியில் சில முக்கியப் பிரமுகர்களின் உதவியை சாமியார் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications