மும்பை தாக்குதல் வழக்கை விரைவாக முடிக்க மாஜி மத்திய அமைச்சர் நிர்ப்பந்தித்தார் - உஜ்வால் நிகாம்
நாக்பூர்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கை விரைவாக முடிக்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் என்னை நிர்ப்பந்தப்படுத்தினார் என்று அந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞரான உஜ்வால் நிகாம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் லாபங்களுக்காக இந்த கோரிக்கையை என்னிடம் வைத்தார் அவர்.
அஜ்மல் கசாப் மீதான வழக்கை விரைவாக முடிப்பதற்காக தனித் தனியாக 12 குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்யுமாறும் எனக்கு அவர் யோசனை தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநில தேர்தலில் தனது கட்சிக்கு ஆதாயம் கிடைப்பதற்காக இவ்வாறு செய்ய அவர் என்னை கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன் என்றார் நிகாம்.
லத்தூரில் நடந்த கருத்தரங்கில் நிகாம் இவ்வாறு பேசியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை தற்போது நிகாம் மறுத்துள்ளார்.
நான் அது போல பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அல்லது தவறான செய்தியாக வந்து விட்டது.
அரசுத் தரப்பு விசாரணையில் யாருடைய குறுக்கீடும் கிடையாது. குற்றப்பத்திரிக்கையை எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்று யாரும் ஆலோசனை கூறவும் இல்லை என்று கூறியுள்ளார் நிகாம்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி இன்றைக்குள் தகவல் தெரிவிக்குமாறு மகாராஷ்டிர மாநில சபாநாயகர் மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications