அனிதா, கமலக்கண்ணன் சனிக்கிழமை பதவியேற்பு

திருச்செந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து, பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, திமுகவில் சேருவதற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் சேர்ந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன்.
வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த ஜெயராமன் புற்றுநோயால் மரணமடைந்ததால், அங்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் அவரது மகன் கமலக் கண்ணன்.
இருவரும் நேற்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வெற்றிச் செய்தியை தெரிவித்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் நாளை மறு நாள் சனிக்கிழமை இருவரும் பதவியேற்கவுள்ளனர்.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இருவருக்கும் சபாநாயகர் ஆவுடையப்பன் பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் செய்து வைப்பார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications