விவேக் ஓபராயை இன்னும் மறக்காத தேவனாம்பட்டினம்

சுனாமி அலைகள் தமிழக கரையோரங்களை துவம்சம் செய்தபோது நாடே அதிர்ந்தது. இப்படி ஒரு பேரவலத்தை சுதந்திர இந்தியா அதுவரை பார்த்ததே இல்லை என்பதால் நாடே பதறிப் போனது.
தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி யார் யாரெல்லாமோ வந்தார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் விவேக் ஓபராய்.
அப்போது இந்தி சினிமாவில் அவர் வளரும் நடிகர். தனக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, நாம் பாதித் தமிழ்நாட்டுக்காரன்தான் என்று உணர்ச்சிகரமாக பேசி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தில் தங்கி மக்களுக்காக நி்வாரணப் பணிகளில் ஈடுபட்டார் விவேக்.
இதனால் தமிழ்நாட்டு சினிமாக்காரர்களுக்குப் பெரும் தர்மசங்கடமாகி விட்டது. விவேக் ஓபராயை உதாரணம் காட்டி தமிழ் சினிமா நடிகர், நடிகர்களை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு விவேக் ஓபராயின் செயல்பாடுகள் டச்சிங்காக இருந்தன.
சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டினம் கிராமத்திலேயே தங்கினார் விவேக். அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். அந்தக் கிராமத்தை தத்தெடுத்து அங்கு சிறந்த முறையிலான வீடுகளைக் கட்டித் தருவதாகவும், அந்த கிராமத்தை உயர்த்தப் போவதாகவும் கூறினார்.
விவேக் ஓபராய் அப்போது நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்துக் கொண்டிருந்தார். ஓபராய்க்கு உதவியாக ஐஸ்வர்யா ராயும் வருவார் என்றும் அப்போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் திடீரென சுனாமி வந்தது போல, ஒருநாள் திடீரென விவேக் ஓபராயும் காணாமல் போய் விட்டார். ஏகப்பட்ட உறுதிமொழிகளை அளித்து தேவனாம்பட்டினம் கிராம மக்களின் மனில் நம்பிக்கையை துளிர்க்க வைத்தவர், அதே வேகத்தில் அதைப் பட்டுப் போகவும் செய்து விட்டார்.
விவேக் ஓபராயின் இந்த செயல் மிகப் பெரிய விமர்சனங்களை அவர் மீது பாயச் செய்தது. சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே மிகக் கடுமையாக விவேக் ஓபராயை சாடிப் பேசினார்.
அவர் கூறுகையில், விவேக் ஓபராய் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, அப்பாவி மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து அவர்களை மோசடி செய்து விட்டார்.
அவர் செய்வதாக சொன்ன திட்டங்களும் கூட அவருடைய பணத்தில் அல்ல, மாறாக, பல்வேறு அமைப்புகளிடமிருந்து திரட்டப்பட்ட நிதியில்தான். சுய விளம்பரத்திற்காகவே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் விவேக் ஓபராய் என்று வறுத்தெடுத்தார்.
ஜெயலலிதா சொன்னது போலத்தான் கடைசியில் நடந்தது. அன்று போனவர் பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. சொன்ன வார்த்தை எதையும் அவர் நிறைவேற்ற முயற்சிக்கவே இல்லை.
இருப்பினும் இன்றும் கூட தேவனாம்பட்டினம் மக்கள் விவேக் ஓபராயை மறக்காமல் உள்ளனர் - அவர் விட்டுச் சென்ற ஏமாற்ற வடுக்களுடன்.












Click it and Unblock the Notifications