சிபு சோரன் முதல்வர்-பாஜக-மாணவர் யூனியனுக்கு து.முதல்வர் பதவிகள்
ராஞ்சி: ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க சிபு சோரனுக்கு பாஜக மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.
இதன்மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான சிபு சோரன் முதல்வராக முயற்சித்து வருகிறார்.
முதல்வர் பதவிக்கு தன்னை ஆதரித்தால் பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கும், ஜார்க்கண்ட் மாணவர் யூனியனைச் சேர்ந்த ஒருவருக்கும் துணை முதல்வர் பதவிகள் வழங்குவதாக அவர் பேரம் பேசி வருகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வென்ற காங்கிரஸ் தனக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபுவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது.
ஆனால், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள பாஜக 3வது இடத்தைப் பிடித்த சிபு சோரனை முதல்வராக்க முன் வந்துள்ளதால் அவர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கிறார்.
81 பேரை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கூட்டணி 25 இடங்களிலும், பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 20 இடங்களிலும், சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 18 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அமைப்பதற்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான இரு கூட்டணிகளுக்குமே சிபுசோரனின் தயவில்லாமல் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது.
இதையடுத்து சிபுசோரன், தனக்கு முதல்வர் பதவி அளிக்கும் கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு என்று அறிவித்துவிட்டார். இதை காங்கிரஸ் ஏற்காததால் பாஜக மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறார்.
காங்கிரசும் முயற்சி:
இந் நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் குமார் கூறுகையில்,
ஜார்க்கண்டில் நாங்கள் ஆட்சி அமைக்க எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு உள்ளோம். 5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட மாணவர்கள் கட்சியுடன் பேசி வருகிறோம். அதன் தலைவர் சுதேஷ் மகதோவுடன் பேசி இருக்கிறோம். மற்றவர்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே எங்களால் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications