'செய்வினை வச்சுடாதீங்க'-நகைகளை திரும்ப போட்டு விட்டு கோரிக்கை வைத்த திருடன்
சேலம்: திருடிச் சென்ற நகைகளை திரும்பக் கொண்டு வந்து வீட்டு வாசலில் வைத்து விட்டு, மன்னிப்புக் கடிதத்துடன், கோபத்தில் எனக்கு எதிராக செய்வினை வைத்து விடாதீர்கள் என்று கோரிக்கையும் வைத்துச் சென்றுள்ளான் ஒரு நூதனத் திருடன்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே நத்தமேடு என்ற பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (30). கடந்த சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு, அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டார்.
மறுநாள் காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் தோடு, அரைஞான் கயிறு, உண்டியலில் இருந்த ரூபாய் 2000 ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் உறவினர்களும், பக்கத்துவீட்டுகாரர்களும் திருடனுக்கு பில்லி சூனியம் செய்வினை செய்து விடலாம் என ஆலோசனை கூறினர். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை திருட்டு பயம் காரணமாக முருகானந்தம் தனது தோட்டத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே தூங்கி விட்டார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அவரது வீட்டு வாசலில் பிளாஸ்டிக் குடம் இருந்தது. அந்த குடத்திற்குள் இருந்த பழனி பஞ்சாமிர்த டப்பாவில் திருடுபோன பொருட்களும், அத்துடன் ஒரு கடிதம் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
கடிதத்தை எடுத்து படித்த போது அதில் எனக்கு 2 குழந்தைகள் உள்ளது, என் மனைவிக்கு உடல் உடல் நிலை சரியில்லை. மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பணம் இல்லாததால் உங்கள் வீட்டில் திருடினேன். திருடிய தங்கத் தோட்டையும், அரைஞான்கயிற்றையும் வைத்துள்ளேன். உண்டியலில் இருந்த பணத்தை மட்டும் நான் எடுத்துக் கொண்டேன்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேச்சைக் கேட்டு எனக்கு பில்லி சூனியம், செய்வினை எதுவும் செய்யவேண்டாம். உங்கள் வீட்டில் திருடியதற்கு மன்னிக்கவும் என்று எழுதியிருந்தது.
வலது கையால் கடிதம் எழுதினால் கையெழுத்தை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள் என்று, இடதுகையால் கிறுக்கலாக அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. திருடிய பொருட்களில் பாதியை திரும்ப வைத்து திருடியவரே மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்தத் திருட்டில் ஈடுபட்டவர் அதே பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் திருடனுக்கு செய்வினை வைக்கலாம் என்று முருகானந்தம் தரப்பில் நடத்தப்பட்ட ஆலோசனை அவனுக்குத் தெரிந்து பயந்து போய் நகையைக் கொண்டு வந்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications