பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திராவுக்கு அனுமதி மறுப்பு
சென்னை: ஆந்திர மாநிலம் குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திராவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் பாலாற்றில் புதிய அணை கட்ட ஆந்திர மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.55 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு இடமும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், பாலாற்றின் குறுக்கே எந்த அணையும் கட்டப்படக்கூடாது என 1892ம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர் மாநிலங்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பாலாற்றில் அணை கட்டி தண்ணீரை தேக்கினால் தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்தன.
ஆந்திர அரசின் இம்முயற்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. முதல்வர் கருணாநிதியும் இது குறித்து மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்களை எழுதினார்.
இதுகுறித்து மத்திய அரசு வாயிலாக ஆந்திரா ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே மறுபக்கம் மத்திய அரசின் வனத்துறையிடமிருந்து அணை கட்டுவதற்கு அனுமதி பெற முயற்சித்தது.
அணைகட்டும் பகுதி யானைகள் அதிகம் உலவும் பகுதியாக உள்ளதால் தேசிய வன உயிரியல் கமிட்டியிடமும் அனுமதி பெறுவது அவசியமாகும்.
இந்நிலையில், மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் அக்டோபர் மாதம் நடந்த இக்கமிட்டியின் கூட்டத்தில் பாலாறு அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது, மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களை மீறி அணை கட்டப்படுவது குறித்தும், அணைகட்டும் இடம் வனப்பகுதியை சேர்ந்தது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இக்கமிட்டி அளி்த்த அறிக்கையின் அடிப்படையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications