பென்னாகரம் செல்ல முயன்ற அன்புமணி ராமதாஸ் தடுக்கப்பட்டார்
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதிக்கு பாமக இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வந்தபோது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று கிருஷ்ணகிரியில் வன்னியர் சங்க மாநாடு நடைபெறுகிறது. இதற்காக டாக்டர் ராமதாஸ் நேற்றே தர்மபுரி வந்து விட்டார். முன்னதாக அன்புமணியும் நேற்று தர்மபுரி வந்தார்.
தர்மபுரியிலிருந்து நேற்று இரவு அவர் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதிக்குக் கிளம்பினார். தொகுதிக்குள் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சியினரின் வாகனங்கள் வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதைக் கண்காணிப்பதற்காக கெட்டூர் கிராமத்தில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை சோதனை நடத்தி வருகிறார்கள். டாக்டர் அன்புமணி கார், அங்கு வந்தபோது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத காரை அனுமதிக்க இயலாது என்று கூறி தொகுதிக்குள் டாக்டர் அன்புமணி கார் செல்லக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர்.
அப்போது அங்கிருந்த தாசில்தார் டியூக் பொன்ராஜ், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோருடன், அன்புமணியுடன் வந்த பா.ம.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு கூடிய பாமகவினர் திடீரென கல்வீச்சில் இறங்கினர். இதனால் பரபரப்பு கூடியது.
தகவல் கிடைத்ததும், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உதவி கலெக்டர் மணிவண்ணன் ஆகியோர் கெட்டூருக்கு விரைந்து சென்றனர். அங்கு திரண்டிருந்த பா.ம.க.வினரை அதிகாரிகள் அமைதிப்படுத்தினார்கள்.
தொகுதிக்குள் டாக்டர் அன்புமணி கார் செல்ல அனுமதி கேட்டு கடிதம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் காலையில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆகவே அனுமதிக்க வேண்டும் என்று பா.ம.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அன்புமணியை தொகுதிக்குள் காரில் செல்ல அனுமதித்தனர். இதன்பிறகு பா.ம.க.வினர் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications