ருசிகா கற்பழிப்பு வழக்கு - மீண்டும் விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு
டெல்லி: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ருசிகா கற்பழிப்பு மற்றும் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த ருசிகா, கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஐஜி ரத்தோர் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த ரத்தோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெறும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து சண்டிகர் சிபிஐ கோர்ட் உத்தரவிட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ருசிகாவின் வாழ்க்கையை சீரழித்தவர் ரத்தோர், அவரது தற்கொலைக்கும் ரத்தோரே காரணம். மேலும், ருசிகாவின் குடும்பத்தினரையும் துண்டாடி கொடுமைக்குள்ளாக்கினார். தனது அதிகார, அரசியல் பலத்தைப் பயன்படுத்தி ருசிகாவின் குடும்பத்தினரை நிர்மூலமாக்கினார். எனவே அவருக்குக் கடும் தண்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையடுத்து ருசிகா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், தற்போது மத்திய அரசும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், ருசிகா வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய அரசு சிபிஐயை கேட்டுக் கொள்ளும் என்றார்.
ருசிகா வழக்கில், ரத்தோருக்கு முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா உதவி செய்ததாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications