For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோஷி உள்பட சில பாஜக தலைவர்களால் தான் செம்மொழி அறிவிப்பு தாமதமானது - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்களால்தான் தமிழ் செம்மொழி குறித்த அறிவிப்பு தள்ளிப் போய், தாமதமாகியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழைச் செம்மொழியாக அறிவித்திடத் தேவைப்படும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று கழக அரசின் சார்பில், தொடர்ந்து மத்திய அரசுக்கு நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. 13.6.2000 அன்று பிரதமர் வாஜ்பாய்க்கு நான் நினைவூட்டுக் கடிதம் அனுப்பினேன். 18.12.2000 அன்று முதல்-அமைச்சர் என்ற முறையில் பிரதமர் வாஜ்பாய்க்கு நான் அனுப்பிய கடிதத்தில், "ஏற்கனவே நான் அனுப்பிய கடிதங்களின்பால் தங்களது அன்பான கவனத்தை ஈர்த்திட விரும்புகிறேன். தொன்மையும், வளமும் நிறைந்த தமிழ்மொழியைச் செம்மொழி எனப் பிரகடனம் செய்திட வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை, மத்திய அரசிடம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது.

உண்மையும், நேர்மையும் வாய்ந்த மாநில அரசின் இக்கோரிக்கையை பரிசீலனை செய்து மத்திய அரசு உரிய ஆணைகளைப் பிறப்பித்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக ஆக்க வேண்டுமென்று - தொடர்ந்து தனது தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லிவந்த தி.மு.க.; 2001 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், முதல் முறையாக, "தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும்'' என்ற வாக்குறுதியை இடம்பெறச் செய்தது. தேர்தல் வாக்குறுதியுடன் நில்லாமல்; கழகம், வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து, களத்தில் இறங்கியது.

2002-ம் ஆண்டு, மே திங்கள் 4 மற்றும் 5ம் நாட்களில் தலைநகர்த் தமிழ்ச் சங்கமும், பெங்களூர்த் தமிழ்ச் சங்கமும் இணைந்து; தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ச் செவ்வியல் மொழி, திருக்குறள் தேசிய நூல் எனும் முப்பெரும் முழக்கத்துடன் மாநாடு நடத்தின. அந்த மாநாட்டில், "இனியும் காலங்கடத்தாமல், உடனே தமிழ் மொழியைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு மைய அரசை மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2003, ஏப்ரல் 13-ம் நாள், தமிழ் மொழி அகாதெமியின் சார்பில் சென்னையில் பத்தாவது தேசிய மொழிகளின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், "இலக்கிய கடல் விருது'' எனக்கு வழங்கப்பட்டது. அந்த விருதினைப் பெற்றுக்கொண்டு, தமிழ் செம்மொழி என்பதன் தொடர்பாக நான் ஆற்றிய உரையின் முக்கியமான பகுதிகளை வழங்குகிறேன்:

தமிழ் மொழியைச் செம்மொழி என்று அழைக்கப்படக்கூடிய தகுதி இருக்கிறதா என்று பார்த்தால், ஒரு மொழி செம்மொழி என்று அழைக்கப்பட என்னென்ன தகுதிகள் வேண்டுமென்றால், பதினோரு தகுதிப்பாடுகளை மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் முற்றிலும் பொருந்தக்கூடிய, உலகத்தின் ஒரேமொழியாகத் தமிழ் திகழ்கிறது.

முக்கியமான உலகமொழிகளின் மொத்த எண்ணிக்கை 600. அதிலே, இலக்கிய, இலக்கணம் உடைய மொழிகள் 300. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை உடைய மொழிகள் 6. அவை, தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹீப்ரூ, கிரீக் ஆகியன. அதிலே, லத்தீனும், ஹீப்ரூவும், ஏறத்தாழ இறந்த மொழிகள் என்று கருதப்படக் கூடியவை. ஆனால், இஸ்ரேல் அரசால், ஹீப்ரூவுக்கு உயிரூட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, ஓரளவிற்கு அதிலே வெற்றியும் பெற்று வருகிறது.

இறப்பின் எல்லை வரை சென்றுவிட்ட கிரேக்க மொழி, அந்த நாடு விடுதலை பெற்ற பின், புதுவாழ்வு பெற்று வருகிறது என்று சொல்லலாம். சமஸ்கிருதம் என்றுமே பேச்சு வழக்குமொழியாக இருந்ததேயில்லை. அது எழுத்து வழக்குக்கு மாத்திரம்தான் பயன்படுகிற மொழி. ஆனால், இந்தியாவிலே உள்ள மூத்த மொழிகளிலே, ஒரு மொழி வடமொழியான சமஸ்கிருதம் என்பதை மறுப்பதற்கில்லை.

நான் ஏற்கனவே தமிழில் எழுதியுள்ள குறளோவியம், அந்த வடமொழியில், சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்து, சீனமொழியை எடுத்துக்கொண்டால், சீனமொழி பட எழுத்துகள், சித்திர எழுத்துக்களைக் கொண்ட மொழி. ஆனால், தமிழ்மொழி ஒன்றுதான், மனித சிந்தனைகளை, நுண்ணிய உணர்வுகளைப் பிசிறில்லாமல், அழுத்தந்திருத்தமாக, துல்லியமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று நானல்ல; மொழியியல் தந்தை என்று போற்றப்படுகின்ற டாக்டர் எமினோ கூறியிருக்கிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழி நம்முடைய மொழி.

தமிழ்மொழி கிளாசிகல் லாங்வேஜ் ஆக, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமென்று நாம் இன்றைக்கு முறையீடு வைக்கிறோம். இந்த முறையீடு வெற்றிபெற்றால், என்ன பயன், தமிழ் செம்மொழியாகிவிட்டால் என்ன ஆகிவிடும் என்று கேட்பவர்களுக்கு நான் தருகின்ற விளக்கம் இதுதான்.

மத்திய அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவித்தால், இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு அதனை ஏற்கும். அதன்பின், அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், தமிழ்த்துறை தனித்துறைகளாக உருவாகும். தமிழ் மொழி, தமிழ்க் கலை, இலக்கிய ஆய்வுகள் முனைப்பாக நடைபெறும்.

இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு, தமிழைச் செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும். உலகப் பல்கலைக்கழகங்களில் இப்போது, கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்துவரும் நிலைமை மாறி, தனியே தமிழ்த் துறைகள் உருவாக்கப்படும்.

மத்திய அரசு, சமஸ்கிருத ஆண்டாக அறிவித்ததைப் போல, தமிழ் ஆண்டு என்று அறிவிக்க வாய்ப்பு ஏற்படும். சமஸ்கிருத ஆண்டைக் கொண்டாட, 15 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியதைப் போல, தமிழுக்கும் ஒதுக்கிக் கொண்டாடும் நிலை உருவாகும். தமிழர்களின் கலை, இலக்கியப் பண்பாட்டுச் சிறப்புக்களை விவரிக்கும் கலைக்களஞ்சியத் தொகுதிகள் உருவாக்கப்பட வாய்ப்பு ஏற்படும். தமிழ்மொழி-ஆங்கில அகராதிகள் பல வெளிவரலாம். அதற்கான செலவு மத்திய அரசு ஏற்கலாம்.

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வேகமூட்டும் வகையில், மேலும் பல திட்டங்கள் வகுத்துச் செயல்பட வாய்ப்பு ஏற்படும். இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில், தமிழிலக்கியங்களும், நவீனப் படைப்புகளும் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவும்.

இதனை நிறைவேற்றுவதற்காகத் தான், தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, பல முயற்சிகளிலே ஈடுபட்டோம். தமிழைச் செம்மொழியாக ஆக்கிடவேண்டுமென்று மத்திய அரசிடம் ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமான ஆவணங்களையெல்லாம் எடுத்துப் பார்த்து - பரிந்துரைகளை எல்லாம் படித்துப் பார்த்து - தமிழைச் செம்மொழியாக ஆக்கவேண்டுமென்ற இந்த மாநாட்டினுடைய தீர்மானத்தை, 1918-ம் ஆண்டிலிருந்து நாம் இதுவரை படிப்படியாக நிறைவேற்றி வருகின்ற இந்தத் தீர்மானக் கருத்தைச் செயல்படுத்த வேண்டுமென்று, இந்த மாநாட்டின் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்''.

தமிழ் செம்மொழி சம்பந்தமாக நான் ஆற்றிய இந்த உரை, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உணர்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியதோடு; ஆங்கில நாளேடுகளிலும் விரிவாக வெளியிடப்பட்டு, மத்திய அரசியலாரின் கவனத்தையும், கருத்தையும் ஈர்த்தது.

2003, மே திங்கள் 3, 4ம் நாள்களில் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கமும், தலைநகர்த் தமிழ்ச் சங்கமும் இணைந்து, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடத்திய மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "காலத் தொன்மை, இலக்கிய வளம், தாய்மைத் தன்மை, உயிரோட்டம் ஆகியவற்றைப் பெற்ற தமிழ் மொழியைச் செவ்வியல் மொழி என அறிவிக்க இந்திய அரசு மறுக்கிறது. தமிழைச் செவ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்குரிய நிலையினை உருவாக்கிட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி; மீண்டும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் - அதன் செயலாளர் ச.ராமநாதனின் முயற்சியின் பயனாக 20.7.2003 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.

18.8.2003 அன்று தலைநகர்த் தமிழ்ச் சங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளின் சார்பில், நாடாளுமன்றம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த உண்ணாவிரதத்தில், தி.மு.க. சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் மத்திய அமைச்சர்களுமான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஏ.கே.எஸ்.விஜயன், ஏ.டி.கே.ஜெயசீலன், டி.வேணுகோபால், எஸ்.அக்கினிராஜ், ஆதிசங்கர், ஆ.கிருட்டினசாமி, வி.வெற்றிச்செல்வன், சங்கரலிங்கம், ச.விடுதலைவிரும்பி, ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து, தமிழகக் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவரும், தமிழ்நாடு காந்தி பேரவைத் தலைவருமான குமரிஅனந்தன், 12.8.2003 அன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் பயிற்று மொழி, செவ்வியல் மொழி என்றெல்லாம் ஆகவேண்டுமென்பது நமது நெடிதுநாள் கோரிக்கையாகும். பாரதி நூற்றாண்டு விழாவை 52 வாரங்களும், பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை 52 வாரங்களும் கொண்டாடிய அமைப்பு எமது இலக்கியப் பேரவையாகும். அதன் சார்பில், நான் உண்ணாநோன்பில் கலந்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைப் போலவே, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் 13.8.2003 அன்று வெளியிட்ட அறிக்கையில், "90 வருடங்களுக்கு முன்பே, தமிழைச் செம்மொழியாக்க வேண்டுமென்று தமிழறிஞர்கள் வற்புறுத்தியிருக்கின்றார்கள். இதற்காக, கட்சிபேதமின்றி கடந்த சில வருடங்களாகத் தமிழறிஞர்கள் மத்திய அரசை வலியுறுத்திப் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தைத் தமிழ் மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கழகம் கலந்து கொள்ளும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டெல்லியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, 19.8.2003 அன்று போராட்டக் குழுவின் சார்பில் இந்தியப் பிரதமர் வாஜ்பயிடமும், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமும் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளக்கோரும் மனு கொடுக்கப்பட்டது.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற அமைப்பாளர் வா.மு.சேதுராமன், தலைநகர்த் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் புலவர் த.சுந்தரராசன், புலவர் அறிவுடைநம்பி, பேராசிரியர் ஆறு.அழகப்பன், தி.க.சு. கண்ணன், பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், டெல்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் முகுந்தன் ஆகியோர் - மத்திய அரசு ஏற்கனவே சமஸ்கிருதம், பாரசீகம், அராபிய மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்திருக்கும் நிலையில்; தமிழின் வளமையையும், தனித்தன்மையையும், தொன்மையையும் கருதி அதனைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும்; கடந்த நூறு ஆண்டுகளாக எழுப்பப்பட்டுவரும் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்றும் - பிரதமரிடமும், குடியரசுத் தலைவரிடமும் வலியுறுத்தினர். இக்கோரிக்கை ஏற்கனவே மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக அவர்களிடம் பிரதமர் வாஜ்பய் தெரிவித்தார்.

தமிழைச் செம்மொழியாக அறிவித்திட எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 2.9.2003 அன்று வெளியிட்ட அறிக்கையில், "தொன்மையும் வளமும் மிக்க மொழியான தமிழைச் செம்மொழியென்று அறிவிக்க வேண்டுமென்பதை, மொழியியல் வல்லுநர்கள்- அறிஞர்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் அனைவரும் ஒரேகுரலில், மாற்றுக் கருத்து ஏதுமின்றி வாஜ்பாய் தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இதற்கிடையே; - தமிழைச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, தனது அமைச்சக அதிகாரிகளிடம் கேட்டதாகவும்; பயன்பாட்டில் இல்லாத இறந்த மொழியை மட்டுமே செம்மொழியாக அறிவிக்க முடியுமென்றும்; தமிழ்மொழிக்கு அனைத்து வளங்களும் உள்ளபோதிலும், அது பயன்பாட்டில் இருப்பதால் செம்மொழியாக அறிவிக்க இயலாதென அமைச்சருக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகவும்; - திடீரென்று ஏடுகளில் அதிகாரபூர்வமின்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது. சமஸ்கிருதத்தோடு ஒப்பிடுகையில், தமிழ் வளமான மொழியாக இருப்பதால், அது செம்மொழிக்குள்ள தகுதியற்ற மொழியென்றால், அதைவிடக் கேலிக்கூத்து வேறு உண்டா? உலகத் தமிழர்கள் முதல் உள்நாட்டுத் தமிழர்கள் வரை அனைவரும் இதனை ஒரு உரிமைப் பிரச்சினையாகக் கருதிட வேண்டும்'' என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

மத்திய ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பங்கு வகித்து வந்த பா.ஜ.க.வில்; முரளி மனோகர் ஜோஷி போன்ற முன்னணித் தலைவர்கள் சிலர், திராவிட மொழிக் குடும்பத்தின் மீது இருந்த தீராத வெறுப்பின் காரணமாக; தமிழ் செம்மொழியென அறிவிக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை தொடர்பாகக் கொண்டிருந்த எதிர்மறையான அணுகுமுறையும், காட்டிய தாமதமும் தமிழ்ச் செம்மொழி அறிவிப்பைத் தள்ளிப்போடச் செய்தன என்ற நிகழ்வினை; வரலாறு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை மறுத்திட இயலாது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X