For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2010 பிறக்கிறது-உலகெங்கும் உற்சாகம்!-சந்திரகிரகணத்தால் கோவில்களில் நள்ளிரவு பூஜை ரத்து!

By Staff
Google Oneindia Tamil News

New Year 2010
2010 பிறக்கிறது-உலகெங்கும் உற்சாகம்!-சந்திரகிரகணத்தால் கோவில்களில் நள்ளிரவு பூஜை ரத்து!

சென்னை: 2010ம் ஆண்டு பிறக்கும் நிலையில் சந்திரகிரகணமும் ஏற்படுவதால், இன்று நள்ளிரவு பூஜை கிடையாது என பல்வேறு கோவில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. அதிகாலை 3 மணிக்கு மேல்தான் நடை திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2009ம் ஆண்டு விடைபெற்று 2010ம் ஆண்டு குடியேறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன.

இந்தியாவில் நள்ளிரவி்ல் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

பல பகுதிகளில் கோவில்களில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு இந்து அமைப்புகள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் கூட சில கோவில்களில் நள்ளிரவு பூஜைக்கு தயாராகவே உள்ளன. ஆனால், இந்த ஆண்டு சந்திரகிரகணம் நடப்பதால் கோவில்களில் நள்ளிரவு பூஜைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி, திருச்செந்தூர், பழநி, திருவேற்காடு, பட்டீஸ்வரம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் நள்ளிரவில் நடைசாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு வழக்கத்துக்கு மாறாக சந்திரகிரகணத்துடன் பிறக்கிறது. இன்று (31ம் தேதி) நள்ளிரவு 12.18 மணி முதல் 1ம் தேதி அதிகாலை 1.23 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படும்.

பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்கள் நடை சாத்தப்பட்டு பூஜைகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்தபிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்து, அதற்கான பரிகார பூஜைகள் செய்த பின் நாளை வழக்கமான பூஜைகள் தொடரும். இதனால் நாளை கோவில்களில் மக்கள் வெள்ளம் அலைமோதும்.

சர்ச்சுகளில் விழாக்கோலம்...

அதே போல சர்ச்சுகளிலும் புத்தாண்டை வரவேற்க கோலாகல ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.

சென்னையில் உள்ள புகழ் பெற்ற சாந்தோம், பெசன்ட் நகர் சர்ச், ராயப்பேட்டை வெஸ்லி சர்ச், பரங்கிமலை புனித தோமையர் சர்ச் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விளக்கலங்காரம் செய்யப்பட்டும், பலூன்கள் உள்ளிட்டவற்றைக் கட்டியும் விமரிசையாக அழகுபடுத்தியுள்ளனர்.

நள்ளிரவு மாஸ் எனப்படும் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடத்தப்படவுள்ளன.

இப்படி வழிபாடுகளுடன் ஒருபககம் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருவது போல ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்க மறுபக்கம் அனைத்து முக்கிய இடங்களிலும் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரையிலும், எலியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் மாலை முதலே அலையடிக்க ஆரம்பித்து விட்டது.

இதேபோல மகாபலிபுரம், கன்னியாகுமரிக் கடற்கரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் மக்கள் 2010ம் ஆண்டை கோலாகலத்துடன் வரவேற்க தயாராகி வருகின்றனர்.

இதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ரிசார்ட்டுகள் எல்லாம் புத்தாண்டுக் களேபர கொண்டாட்டத்துக்காக அமர்க்களமாக தயாராகியுள்ளன. நட்சத்திர ஹோட்டல்களிலும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

இதுதவிர தீம் பார்க்குகளிலும் ரிசார்ட்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

சென்னையில் 12,000 போலீஸார் குவிப்பு:

இந் நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டதையொட்டி சென்னை பாதுகாப்புப் பணியில் 12,000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மெரீனா கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மெரினா, எலியட்ஸ் பீச், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதி உள்ள சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகள் எதுவும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும். ஆங்காங்கே சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற போர்வையில் பெண்களிடம் அத்துமீறி நடப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 11 மணிக்கு மேல் மதுபார்களை திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. மற்ற விருந்து நிகழ்ச்சிகளை நள்ளிரவு 1 மணி வரை நடத்தலாம்.

மெரினா, எலியட்ஸ் கடற்கரை போன்ற பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடுமையான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

புத்தாண்டு விருந்தில் கலந்துகொள்வோர் மது போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். விருந்து முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது வாகனங்களை ஓட்ட டிரைவர்களை ஏற்பாடு செய்துகொள்வது நல்லது என்றார்.

புத்தாண்டை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடுங்கள். அதேசமயத்தில் அசம்பாவிதம் ஏற்படும் வகையிலோ, அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ கொண்டாடுவதைத் தவிருங்கள் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அன்பான கோரிக்கை விடுத்துள்ளது.

2009 சந்தித்த சோதனைகள், வேதனைகள் உள்ளிட்டவை மறைந்து, 2010ம் ஆண்டில் அனைத்து மக்களுக்கும் அமைதியும், நிம்மதியும் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் புது ஆண்டில் அடியெடுத்து வைப்போம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X