கர்நாடகாவில் தொழில் அதிபர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அதிகாரிகளை ஆடிப்போக வைத்த ரேஷ்மா.. பின்னணி
பெங்களூர்: தனியார் திருமண தகவல் மையம் மூலமாக பழகி தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியதாக கர்நாடகா மாநிலம் பெலகாவியில் பெண் ஒருவர் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் தொழில் அதிபர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது பொய்யான புகார் அளித்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது . இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இப்படியும் கூட பணம் பறிக்க முயற்சி செய்வார்களா என்பது போல் பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. சில பெண்கள் போலியாக தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பாலியல் புகார் அளிப்பது அடிக்கடி நடக்கின்றன. காதலிப்பவர்கள் மீது மட்டுமின்றி, நெருங்கி பழகிவிட்டு பின்னர் பணம் பறிக்கும் நோக்கில் புகார் அளிப்பதும் நடக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கேம்ப் மற்றும் கட்டபிரபா காவல் நிலையங்களில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தொழில் அதிபர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார்களை அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரில், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக பழகி தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பலாத்காரம் செய்துவிட்டு மோசடி செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில் இன்ஸ்பெக்டர் மற்றும் தொழில் அதிபர் மீது அந்த பெண், பொய்யான பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கட்டபிரபாவை சேர்ந்த ரேஷ்மா சங்கர முதகா என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பற்றி விசாரித்த போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. ரேஷ்மா என்ற அந்த பெண் தற்போது பெலகாவி டவுன் லட்சுமிநகரில் வசித்து வந்தார்.
ரேஷ்மா தனியார் திருமண தகவல் மையத்தில் அழகான பெண்களின் புகைப்படத்தை அதில் தன்னுடைய சுய விவரங்களை பதிவிடுவாராம். பின்னர் அதன்மூலம் தனக்கு வரன் தேடுவார். பின்னர் ரேஷ்மாவை திருமணம் செய்ய விரும்பும் நபர்கள், அவரை தொடர்பு கொண்டு பேச விரும்புவார்கள். இவ்வாறு தொடர்பு கொள்ளும் நபர்களை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வரவழைத்து எல்லை மீற வைக்க முயற்சிப்பாராம். சபலப்படும் ஆண்களை, தன்னை கற்பழித்து விட்டதாக கூறி ரேஷ்மா மிரட்டல் விடுத்து பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருந்தாராம்.
தொழில் அதிபர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என பல்வேறு நபர்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, அவர்கள் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் பொய் புகார் அளித்து, ரேஷ்மா பணம் பறித்து வந்தது விசாரணையில் உறுதியாது. இவ்வாறு மிரட்டி பணம் பறித்ததுடன், பொய் புகார்கள் அளித்து வந்ததால் ரேஷ்மா பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கைதான ரேஷ்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த தகவலை பெலகாவி மாவட்ட எஸ்பி ராமராஜன் தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications