நீதிமன்றம் வந்தபோது தப்பியோடிய மோசடி ஆடிட்டர்
மதுரை: வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத ஆடிட்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட போது தப்பி ஓடிவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் விளாத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சதாசிவம். இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். மதுரை தமிழ் சங்கம் ரோட்டில் சவுடாம்பிகா ஏஜென்சி என்ற பெயரி்ல் தொழில் நடத்தினார்.
இதற்காக, இயந்திரங்கள், காப்பர் வயர்கள் வாங்குவதாக கூறி சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கனரா வங்கி கிளையில் 2005ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 252 கடன் பெற்றார். ஆனால், கடனை திருப்பி செலுத்தவில்லை.
இதனால், சதாசிவம் மீது மதுரை முதலாவது கூடுதல் துணை நீதிமன்றத்தில் கனரா வங்கி வழக்கு தொடர்ந்தது. கடன் பாக்கியுடன் 16 சதவீத வட்டியையும் சேர்த்து ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 628 செலுத்த வேண்டும் என சதாசிவத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போதும் சதாசிவம் கடன் பாக்கியை செலுத்தவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்திடம் கனரா வங்கி சார்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து சதாசிவம் மீது சிவில் வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சிதாசிவத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோர்ட் ஊழியர் பிச்சை அழைத்து வந்தார். அப்போது கோர்ட் வளாகத்தில் இருந்து, சதாசிவம் தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து வங்கி சார்பில் வக்கீல் அங்கமுத்து, மாவட்ட நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆடிட்டர் சதாசிவம் மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளி்ல் உள்ள மேலும் ஒன்பது வங்கிகளில் பலகோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications