வீட்டில் நாய் வளர்க்கலாமா?- ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: வீடுகளில் நாய் வளர்போர் இனி சற்று ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும்.
குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் நாய் அல்லது மற்ற செல்லப்பிராணிகளை உடன் வைத்துக்கொள்வதை உரிமையாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த விக்ரம் என்பவர் தன் வீட்டில் 30க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நாய்களால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி தொந்தரவு ஏற்படுவதாக உள்ளூர் நிர்வாகத்திடம் புகார்கள் தரப்பட்டன.
கோரஸாக நாய்கள் குறைப்பதும், ஒருவித துர்நாற்றமும் பெரும் தொல்லையாக இருப்பதாக அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதன்பேரில் நாய்களை அப்புறப்படுத்துமாறு விக்ரமிடம் உள்ளூர் நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், நாய்கள் வளர்ப்பது தன் உரிமை எனக்கூறி, உள்ளூர் நிர்வாகத்தை எதிர்த்து விக்ரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், 'குடியிருப்புக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மற்றவர்களுக்கு அசவுகர்யம் ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மனுதாரர் நடந்துகொள்வதாக புகார்கள் உள்ளது.
இந்நிலையில், குடியிருப்புகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உரிமையாக கருதமுடியாது' என்று குறிப்பிட்டார்.
எனவே, விக்ரம் உடனடியாக நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications