தனி அணி அமைக்க முயற்சித்தேன்-திருமாவளவன்
சென்னை: கடந்த தேர்தலின்போது, ஈழத் தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி ஒரு தனி அணி அமைக்க முயற்சித்தேன். அதற்கு பலன் கிட்டவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
அவர் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் நடந்தது. கவிஞர் குலாப் தலைமையில் நடந்த இந்த விழாவி்ல் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, கவிஞர் தணிகை செல்வன் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.
திருமாவளவன் பேசுகையில்,
ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் நெருக்கடியினால் எனக்கு எழுந்த உணர்வுகளை சொற்களாக்கி எழுதினேன். அதைத் தான் நண்பர்கள் தொகுத்து கவிதை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரித்து நான் கவிதைகள் எழுதினேன்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலை களத்தில் நின்று போராடி வருகிறேன். 25 ஆண்டுகளாக இந்த களத்தில் ஊறிக் கிடக்கிறேன். என் மீது வீண்பழி சுமத்துவோர், வீணான விமர்சனம் செய்வோர் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
கத்தியை எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்று சொல்கிறார்கள். மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி எதை எடுத்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகவே திமுக-காங்கிரஸ் அணியில் இடம் பெற்றுள்ளேன். அந்த அணியில் இருந்தாலும் என்னுடைய கொள்கை லட்சியத்திலிருந்து சிறிதும் மாறாமல் குரல் கொடுத்து வருகிறேன்.
குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோதும், அக்கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளது என்று நாடாளுமன்றத்திலேயே நான் குற்றம் சுமத்தினேன்.
தலித் மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன். கடந்த தேர்தலின்போது, தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி ஒரு தனி அணி அமைக்க முயற்சித்தேன். அதற்கு பலன் கிட்டவில்லை.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். உண்மையிலேயே இலங்கை தமிழர் பிரச்சனையில் இங்குள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு அக்கறை இருக்குமே என்றால், இதை ஊதிப் பெரிதாக்கி தமிழகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கலாம்.
ஆனால், ஏதோ ஒரு அரசியல் குறுக்கிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு யாரும் இந்த பிரச்சனையை கையில் எடுத்து களத்திற்கு வரவில்லை. இப்படித்தான் நாங்கள் மட்டுமே தமிழ் தேசிய விடுதலைக்காக தனித்து குரல் கொடுத்து போராடி வருகிறோம்.
ஈழ பிரச்சனைக்காக போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் 26 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இங்குள்ள கவிஞர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ் சமூகத்தின் ஒரு நல்ல புரட்சி நடக்க வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது உங்களுடைய கடமை. அந்த வரலாற்று கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது என்றார் திருமாவளவன்.
இளங்கோவனை நடமாட விடமாட்டோம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு பேசுகையில்,
எங்கள் தலைவர் திருமாவளவனை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து தாக்கிப் பேசி வருகிறார். தலைவருடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம். மீண்டும் இளங்கோவன் திருமாவளவனை தாக்கி பேசினால் பொது இடத்தில் அவரை தலைக்காட்ட விடமாட்டோம் என்றார்.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்எல்ஏ, கவிஞர்கள் பழனி பாரதி, யுகபாரதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.












Click it and Unblock the Notifications