நெல்லை இளம்பெண் சிங்கப்பூரில் மர்மச் சாவு
நெல்லை: விகேபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சிங்கப்பூரில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை மீட்டு தரும்படி போலீசில் தந்தை புகார் செய்தார்.
நெல்லை மாவட்டம் விகேபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி வடிவு. இவர்களுக்கு முத்துலெட்சுமி (21) என்ற மகளும், மாரியப்பன் (19) என்ற மகனும் உள்ளனர்.
வடிவின் உறவினர் கோழிக்கோடு அருகேயுள்ள வடகரையை சேர்ந்த பொன்னு ஸ்ரீதரன். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன் சிங்கப்பூரில் உள்ள தனது மருமகன் ஆகாஷ் பாத்தியா என்பவரது வீட்டுக்கு வேலை செய்ய பெண் தேவை என்று கூறினார்.
இதனால் வடிவு தனது மகள் முத்துலெட்சுமியை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். 2 மாதங்களாக சம்பளம் அனுப்பி வந்த முத்துலெட்சுமி 2 நாட்களுக்கு முன்பு வரை பெற்றோருடன் ஃபோனில் பேசியிருக்கிறார்.
இதற்கிடையே நேற்று மாலை முத்துலெட்சுமி இறந்து விட்டார் என சிங்கப்பூரில் இருந்து தகவல் வந்தது. போனில் பேசியவர் உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமியின் பெற்றோர், கோழிக்கோட்டில் உள்ள உறவினர் மூலமாக விவரங்களை விசாரிக்க முயன்றனர்.
இந்நிலையில் இன்று காலை சங்கரநாராயணன் முகவரிக்கு பேக்ஸ் ஒன்று வந்தது. அதில் முத்துலெட்சுமியின் உடலை சிங்கப்பூரில் அடக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளோம். உங்கள் அனுமதி தேவைப்படுகிறது. இதில் கையெழுத்திட்டு மீண்டும் பேக்ஸ் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி்ன் பெற்றோர் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும் விகேபுரம் போலீசில் புகார் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications