நில விவகாரம்-ஆசிரியரை மிரட்டும் அதிமுக பெண் எம்எல்ஏ
தஞ்சை: நில விவகாரம் தொடர்பாக, தன்னை மிரட்டும் அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மன்னார்குடி ஆசிரியர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் வெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர் சேவியர். இவர் மன்னார்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அ.தி.மு.க எம்.எம்.ஏ இளமதி நில விவகாரம் தொடர்பாக தன்னை மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.
போலீசாரிடம் புகார் அளித்தும் பலனில்லாததால் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
சேவியர் மனுவில் கூறியிருப்பதாவது: நான் தஞ்சையில் வசித்து வருகிறேன். தஞ்சை கீழவாசல் பகுதியில் ஒரு இடத்தினை விற்பதற்காக முகமது உசேன், முகமது அலி ஆகியோர் எனக்கு அதிகார பத்திரம் வழங்கியிருந்தனர்.
அதன் பேரில் அந்த நிலத்தை வலங்கைமான் தொகுதி எம்.எல்.ஏ. இளமதி என்பவருக்கு ரூ.33 லட்சத்துக்கு பேசி முடிக்கப்பட்டது. முதல் கட்ட தவணையாக அவர் எனக்கு ரூ 5 லட்சம் வழங்கினார். ஆனால் கிரயம் செய்யவில்லை.
அந்த இடத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் கொடுத்தார். ஆனால் நிலத்திற்குரிய மீதித் தொகையை கொடுக்காமல் இளமதி இழுத்தடித்து வந்தார்.
எனவே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை கிரயம் செய்யவேண்டும். அல்லது ரூ.10 லட்சம் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
தற்போது, மொத்த இடத்தையும் எழுதி கொடுக்கும்படி என்னை மிரட்டி வருகிறார் என சேவியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ராஜ இளங்கோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்டத்திற்கு உட்பட்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க்வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications