டெல்லியில் கடும்பனி: விமான-ரயில் சேவை பாதிப்பு
டெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி, சென்னை இடையிலான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நிஜாமுதீனில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு வரவேண்டிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் (2434) இன்று காலை 8.30 மணிக்கு தாமதமாக சென்னை வந்தது.
சென்னை சென்டிரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.10 மணிக்கு நிஜாமுதீன் செல்ல வேண்டிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (2433) இன்று மாலை 3.15 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரெயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதவிர பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கு இடையே செல்லும் 36 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 22 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
டெல்லியில் தற்போது குறைந்தபட்ச வெப்ப நிலை 8 டிகிரி வரை நிலவுகிறது. இதனால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
150 மீட்டர்களுக்கு அப்பால் உள்ள காட்சி தெரியாத அளவுக்கு பனிப்பொழியும் நிலையில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 30 உள்ளூர் விமானங்கள் மற்றும் 20 சர்வதேச விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு விமான ஓடுபாதையில் 50 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே எதிரே உள்ள காட்சி தெரிந்ததாக கூறப்படுகிறது. சுமார் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று இரவு 11 மணியில் இருந்து டெல்லியில் எந்த விமானமும் தரை இறங்கவில்லை. புறப்படவும் இல்லை.
வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்கள் ஜெய்ப்பூர், ஆமதாபாத், கொல்கத்தா, போபால் ஆகிய இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. கொல்கத்தாவில் இருந்து டெல்லி வந்த தனியார் விமானங்கள் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications