வேலுப்பிள்ளைக்கு கனடா படைப்பாளிகள் புகழாரம்
டோரன்டோ: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை, திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மறைவுக்கு கனடா தமிழ் படைப்பாளிகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் சாவு தமிழினத்தைக் கவலைக் கடலில் தள்ளியுள்ளது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை பனாகொட படை முகாமில் காலமானார் என்ற செய்தி கேட்டு கவலை அடைந்தோம்.
மே மாதத்தில் சிங்கள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வேலுப்பிள்ளையும் பக்கவாதத்தால் அவதிப்படும் அவரது துணைவியார் பார்வதியும் இந்நாள் வரை சட்டத்துக்கு முரணாக பனாகொட ராணுவ முகாமில் கொடிய ராசபக்சே அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
தேசியத் தலைவரின் தந்தை, தாய் என்ற ஒரே குற்றத்துக்காகவே அவர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டார்கள்.
மானிட நேயமோ குறைந்தளவு நாகரிகமோ இல்லாத ஒரு கொடுங்கோல் அரசு, எண்பது அகவையைக் கடந்த வேலுப்பிள்ளை இணையர்களை சாதாரண 'கிரிமினல்' குற்றவாளிகள் போல் பனாகொட ராணுவ முகாமில் அடைத்து வைத்த கொடுமையை யார் மன்னித்தாலும் தமிழினம் மன்னிக்காது என்பதை கூறி வைக்க விரும்புகிறோம்.
நாங்கள் மேற்கொண்டது ராணுவ நடவடிக்கை அல்ல, தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்க மேற்கொண்ட மனிதநேய நடவடிக்கை என்ற இலங்கை அரசின் பரப்புரை எவ்வளவு பொய்யுரை என்பதை இனிமேலாவது உலகநாடுகள் புரிந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். சிங்கள ஆட்சியாளரின் அகரமுதலியில் விடுதலை என்பது அடுத்த உலகம் என்பது பொருள் ஆகும்.
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை சாவு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சாவிற்கான காரணங்களை இலங்கை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்
திருவேங்கடம் வேலுப்பிள்ளை இணையர் சட்டத்துக்கு முரணாகக் கைது செய்து படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டிக்காத உலக நாடுகளையும் மனிதவுரிமை அமைப்புக்களையும் நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.
இப்போதாவது பார்வதி அம்மையார் அவர்களை உடனடியாக விடுவிக்க உலகநாடுகளும் மனிதவுரிமை அமைப்புக்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழினத்தின் நீண்ட வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு வீர மகனைப் பெற்றெடுத்த அமரர் திருவேங்கடம் அவர்களது பெயர் என்றும் மக்கள் மனதில் கொலு வீற்றிருக்கும் என்பதில் அய்யமில்லை.
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களது மறைவு உலகளாவிய தமிழ்மக்களை ஆறாத்துயரில் தள்ளியுள்ளது. அவரது மறைவால் வாடும் அவரது இணையர், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
விடுதலைப் புலிகள் இரங்கல் செய்தி:
வேலுப்பிள்ளை மரணம் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.
இறுதியில் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி இலங்கைப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜபக்சே தான் பொறுப்பு-நெடுமாறன்:
இதுகுறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை சிங்கள வதைமுகாமில் மரணமடைந்த செய்தி உலகம் முழுவதிலுமுள்ளத் தமிழர்களை அளவற்ற வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களையும் வதைமுகாமில் கடந்த 8 மாதங்களாக அடைத்து வைத்த கொடுமையின் காரணமாகவே அவர் இறந்திருக்கிறார். அவரின் மரணம் இயற்கையானது என சிங்கள அரசு கூறுவது நம்பத்தகுந்தது அல்ல. அவரும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
பார்வதி அம்மையாரும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு செயல் இழந்திருந்தார். இந்நிலையில் சிறிதுகூட இரக்கம் இல்லாமல் அவர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரால் அவர்களுக்கு மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுமையை மூடி மறைக்க ராஜபக்சே முயல்கிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பி வைத்த நாடாளுமன்ற குழுவினர்களாவது பிரபாகரனின் பெற்றோரை விடுதலை செய்ய வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தி இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் அவர்களைச் சந்திக்கவாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இக்குழுவினர் இவ்வாறு செய்ய தவறிவிட்டார்கள். கனடாவில் இருக்கும் பிரபாகரனின் சகோதரி தனது பெற்றோரை கனடாவிற்கு அனுப்பி வைக்கும்படி விடுத்த வேண்டுகோளையும் ராஜபக்சே மதிக்கவில்லை.
வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு ராஜபக்சேயே பொறுப்பாவார் என நான் குற்றம் சாட்டுகிறேன். தனது சாவிலும் தானொரு வீரனின் தந்தை என்பதை வேலுப்பிள்ளை நிரூபித்திருக்கிறார். ராஜபக்சேவிடம் முறையிட்டு விடுதலை பெற விரும்பாமல் இறுதிவரை வதைமுகாமிலேயே வாழ்ந்து மாண்டிருக்கிறார். இந்தக் கட்டத்திலாவது அவரின் உடலை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறேன்.
பார்வதி அம்மையாரை உடனே விடுதலை செய்து அவரின் மகளிடம் அனுப்பி வைக்கும் மனிதநேயக் கடமையையாவது செய்யும்படி ராஜபக்சேவை வேண்டிக் கொள்கிறேன். வேலுப்பிள்ளை அவர்களின் வீர மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக்கொடி ஊர்வலங்களையும் இரங்கல் கூட்டங்களையும் நடத்தும்படி வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications