தண்டவாளத்தில் இடிந்து விழுந்த சுவர்-ரயில் சேவை பாதிப்பு
சென்னை: அடுக்குமாடி கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் சென்னை எழும்பூர்-பூங்கா நகர் இடையிலான மின் ரயில் போக்குவரத்து 3 மணிநேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை எழும்பூர்- பூங்கா நகர் ரயில் நிலையங்கள் இடையே கடற்கரை நோக்கி செல்லும் தண்டவாளத்தையொட்டி உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகள் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் சரிந்து விழுந்தன. சுமார் 100 அடிக்கு தண்டவாளத்தில் இடிபாடுகள் விழுந்து கிடந்ததால், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பின்னால் வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதேபோல் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டன.
தண்டவாளத்தில் விழுந்துகிடந்த இடிபாடுகளை சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். அதன் பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதனால் இன்று காலை சுமார் 3 மணி நேரம் இந்த தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலுவலகம் செல்லும் பயணிகள் இதனால் பாதிப்படைந்தனர்.
மின்சார ரயில் வரும் சமயத்தில் இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என அதிகாரி ஒருவர் கூறினார். எழும்பூர் ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications