ஒய்எஸ்ஆர் பலி-ரிலையன்ஸ் சதி: டிவி செய்தி-நிறுவனங்கள் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

Rajasekhara Reddy
ஹைதராபாத்: ஆந்திர முதல்வராக இருந்த ஓய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதி காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக ஒரு ரஷ்ய இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை ஆந்திராவின் டிவி5 சேனல் நேற்றிரவு ஒளிபரப்பியதையடுத்து முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன கிளைகள், ஷோரூம்கள் மற்றும் விற்பனை மையங்களை காங்கிரசார் அடித்து நொறுக்கினர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கடும் புயல்-மழையில் பயணித்த ரெட்டியின் ஹெலிகாப்டர் ஆந்திராவின் நல்லமலை மலைப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறி அதிலிருந்த அனைவரும் பலியாயினர்.

இந் நிலையில், ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி படுகையி்ல் உள்ள எரிவாயுவை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தான் ராஜசேகர ரெட்டி சதி செய்து கொல்லப்பட்டார் என்று ஒரு 'த எக்ஸைல்ட் மேகசீன்' என்ற ரஷ்ய இணையத் தளம் கூறியுள்ளது.

இந்த எரிவாயு தேசிய சொத்து என்றும் அதை அம்பானி சகோதரர்களோ அல்லது அவர்களது தாயார் கோகிலா பென்னோ உரிமை கொண்டாட முடியாது என்றும், இந்த எரிவாயுவுக்காக அவர்கள் சண்டை போட்டுக் கொள்வதை ஏற்க முடியாது என்றும் ரெட்டி கூறியதாகவும், இதனால் தான் அவர் ஹெலிகாப்டர் விபத்தால் கொல்லப்பட்டார் என்றும் அந்த இணையத் தளம் கூறியுள்ளது.

த எக்ஸைல்ட் இணையத் தளத்துக்கு இந்தத் தகவலைத் தந்திருப்பது அமெரிக்க பொருளாதார நிபுணர் ஒருவர் தான். அவர் முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றியவராம். அவர் தந்த தகவலின் அடிப்படையில் இந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டியில் பதிவான பேச்சைக் கூட இந்திய அரசு வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அந்த இணையத் தளம், விபத்தை சரியாக விசாரித்தால் உண்மையை கண்டுபிடித்து விடலாம் என்று கூறியுள்ளது.

இந்தச் செய்தியை ஆந்திராவின் டிவி5 தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதனால் ஆத்திரமடைந்த ரெட்டியின் தீவிர ஆதரவாளர்களும் காங்கிரசாரும் ஆந்திரா முழுவதும் அம்பானிகளின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் அடித்து நொறுக்கினர்.

ரிலையன்ஸ் நிறுவன செல்போன் அலுவலங்கள், ரீசார்ஜ் ஷோரூம்கள், காய்கறி கடைகள், துணிக்கடை, செல்போன் டவர்கள், பெட்ரோல் பங்குக்கள் என அந்த நிறுவனத்தின் எந்த பிரிவும் தப்பவில்லை.

ஹைதராபாத், அனந்தபுரம், நெல்லூர், கடப்பா, செகந்திராபாத், நல்கொண்டா, விசாகப்பட்டினம், தர்மாவரம், திருப்பதி, கர்நூல், குண்டூர், கிருஷ்ணா, கோதாவரி என எல்லா மாவட்டங்களிலும் இந்தத் தாக்குதல்கள் நடந்தன.

ஹைதராபாத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ரிலையன்ஸ் நிறுவன ஷோரூம்கள்- கடைகள் மீது தாக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் டேங்கருக்கும் தீ வைக்கப்பட்டது.

திருப்பதியில் ரிலையன்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த சினிமா தியேட்டர் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து ஆந்திரா முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து வர்த்தக அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் மூடிய கடைகள் மீதும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

பல இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. ராஜசேகர ரெட்டி விவகாரத்தில், முறையான நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.

ஏற்கனவே தெலுங்கானா விவகாரத்தில் ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே முடங்கிவிட்ட நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவன கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ரிலையன்ஸ் மறுப்பு:

இந் நிலையில் ரஷ்ய இணையத் தளம் மற்றும் டிவி5 தொலைக்காட்சியில் வெளியான செய்திகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பும் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

தவறான, கடுமையான, பெயரைக் கெடுக்கும் செய்தியை வெளியிட்டுள்ள டிவி5 தொலைக்காட்சி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழில் போட்டி காரணமாக டிவி5 நிறுவனத்துடன் இணைந்து இந்த சதியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் கூறியுள்ளது.

இன்று 10 மாவட்டங்களில் பந்த்:

இந் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

கடப்பா, அனந்தபுரம், குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர், நிஜாமாபாத், சித்தூர் உள்பட 10 மாவட்டங்களில் ராஜசேகரரெட்டி சாவில் உள்ள சதியை கண்டுபிடிக்க கோரி முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது. இதனால் அங்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை.

ரிலையன்ஸ் நிறுவன கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கடைகள் முன் அதிரடிப்படை மற்றும் கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் செல்போன் கோபுரங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டிவி5 மீது வழக்கு:

இந் நிலையில் இந்தச் செய்தியை ஒளிபரப்பிய டிவி5 தொலைக்காட்சி மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜெகன் மோகன் கோரிக்கை:

இந் நிலையில் ராஜசேகர ரெட்டியின் மகனும் முதல்வர் பதவி மீது கண் வைத்திருப்பவருமான ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் ஆத்திரப்பட வேண்டாம். வன்முறையில் ஈடுபட வேண்டாம். இப்போது வெளியாகியுள்ள செய்தியின் கோணத்திலும் விசாரணையை நடத்துமாறு மத்திய அரசிடம் கோருவேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே அந்த ரஷ்ய இணையத்தளத்தில் இந்தச் செய்தியின் வெளியான 'லிங்க்' இந்தியாவில் செயல்படவில்லை. இது ஏதேச்சையாத நடந்ததா அல்லது முடக்கப்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+