எஸ்.ஐ. படுகொலை- கடையம் எஸ்.ஐயின் மைத்துனர் உள்ளிட்ட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

SI Sivasubramaniyam with Wife Sivakami
திருநெல்வேலி: ஆள்மாறாட்டமாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனின் மைத்துனர் மற்றும் இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டரான வெற்றிவேல், நேற்று முன்தினம் ஆழ்வார்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நடுரோட்டில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலைக் கும்பல் வெட்டிக் கொன்று கொண்டிருந்த போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன், அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கார்களில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர்.

நடுச் சாலையில் நடந்த படுகொலையைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் கார்களை நிறுத்தி இறங்கி ஓடி வந்தனர். இதையடுத்து கொலைக் கும்பல் ஓடி விட்டது.
இந்த வழக்கை தற்போது ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கும், அவரது மனைவி சிவகாமிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சிவகாமிதான் கூலிப்படையை ஏவினார்...

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சிவகாமி தரப்புதான் கூலிப்படையை ஏவி சிவசுப்பிரமணியனை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியதாக தெரிய வந்துள்ளது.

மேலும், சிவகாகமிக்கு, அவரது தாயாரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகாமியும், அவரது தாயாரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் நாலாபுறமும் தேடி வருகின்றனர்.

நேற்று சிவகாமி போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

3 பேர் கைது

இந்த நிலையில் இன்று இந்தக் கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாமியின் அண்ணனும், சிவசுப்பிரமணியின் மைத்துனருமான கந்தசாமி (32), உறவினர் சண்முக சுந்தரம் (62), கள்ளபிரான் (29) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் சண்முக சுந்தரம் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஆவார்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அம்பாசமுத்திரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு முகாமிட்டுள்ள கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும், சிவசுப்பிரமணியத்தனைத் தான் குறி வைத்தோம். ஆனால் தவறுதலாக வெற்றிவேல் கொல்லப்பட்டு விட்டார் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்தக் கொலை வழக்கில் மேலும் 10 பேருக்குத் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உடல் தகனம்..

முன்னதாக, வெற்றிவேலின் உடல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது காலில் வெடிகுண்டுகளின் துகள்கள் இருந்தது. இதன் மூலம், எந்த வகையான வெடிகுண்டு அவர் மீது வீசப்பட்டது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனையும் நடத்தப்பட்டது.

பின்னர் பிரேத பரிசோதனை அறை முன்பு வெற்றிவேலின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணப்பன், மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க் மற்றும் பலர் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிறகு வெற்றிவேலுவின் உடல் சங்கரன்கோவிலை அடுத்த முள்ளிக்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 2.10 மணிக்கு அவரது வீட்டு முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

உறவினர்கள், ஊர் பிரமுகர்கள், தனிப்பிரிவு போலீசார், உளவுப் பிரிவு போலீசார் கறுப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். பிறகு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஊர் அருகே உள்ள மயானத்தில் மதியம் 2.45 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உடலுக்கு மகன் அசோக்குமார் தீ மூட்டினார்.

இந்தக் கொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க் கூறுகையில்,

கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கும், அவருடைய மனைவி சிவகாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது விவாகரத்து வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அவரை பழிவாங்கும் நோக்கில், அவருடைய மனைவியின் உறவினர்கள் வந்து உள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், வெற்றிவேல் ஆகிய இருவரும் ஒரே சாயலில் இருந்ததுடன், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது வழக்கம். இதனால் ஹெல்மெட் அணிந்து வந்த வெற்றிவேலை, சிவசுப்பிரமணியன் என்று நினைத்து ஆள்மாறாட்டமாக கொலை செய்து உள்ளார்கள்.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம் தெப்ப குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தேவர் மகன் கந்தசாமியின் போட்டோவுடன் கூடிய ஆர்.சி.புத்தகம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

கந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரணியனின் மைத்துனர் ஆவார். ஏற்கனவே கந்தசாமியின் கூட்டாளிகள் 2 முறை சிவசுப்பிரமணியத்தை கொலை செய்ய முயற்சி செய்து உள்ளனர்.

இந்த கொலை சம்பந்தமாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 (சட்ட விரோதமாக கூடுதல்), 147(ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல்), 341 (வழிமறித்தல்), 307 (கொலை முயற்சி), 302 கொலை, 3, 4 இந்திய வெடிபொருள் தடுப்பு சட்டம் ஆகிய 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் நெல்லை, குமரி, ஸ்ரீவைகுண்டம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

கடையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடமும் விசாரணை நடத்தப்படும்.

இந்த சம்பவத்தையொட்டி மேலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் குடும்பத்திற்கு அரசின் உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+