ஆசிரியருடன் சென்ற மாணவி திரும்பினார்- கற்பழிக்கப்பட்டதாக புகார்
சென்னை: சென்னையில் ஆசிரியருடன் மாயமான பிளஸ்2 மாணவி திரும்பியுள்ளார். ஆனால் தன்னை ஆசிரியர் ஜெபம் செய்யலாம் என்று கூறி வேளாங்கண்ணிக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கு வைத்துக் கற்பழித்து விட்டதாக அவர் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் அருகே எருக்கஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் அமலன் (46) தன்னிடம் டியூஷன் படிக்க வந்த பிளஸ்2 மாணவியை கடத்திச் சென்றதாக பரபரப்பு ஏற்பட்டது.
மகளைக் கடத்திக் கொண்டு போய் விட்டதாக மாணவியின் தந்தையும், கணவரைக் காணவில்லை என்று ஆசிரியரின் மனைவியும் தனித் தனியாக புகார் அளித்தனர். இரு புகார்களின் பேரிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர்.
இந்த நிலையில், மாணவியின் பெற்றோருடன் போனில் பேசிய ஆசிரியர், இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மாணவியுடன் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு ஆசிரியர் அமலன் வந்தார். மாணவியை வக்கீல் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து மாணவியை அந்த வக்கீல் போலீசிடம் ஒப்படைத்தார்.
அதன் பிறகு, போலீசாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், 'நான் நன்றாக படிப்பேன். பள்ளியில் முதல் மாணவியாக வந்தாலும் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது.
இதைத் தெரிந்து கொண்ட ஆசிரியர் அமலன், எளிதாக என்னை வசப்படுத்தி விட்டார். அவரிடம் டியூஷன் படித்தால் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என ஆர்வத்தை தூண்டினார்.
அவரை, என்னுடைய தந்தை போல நினைத்து அவரிடம் டியூஷன் சேர்ந்தேன். சில நாட்களுக்கு முன், வேளாங்கண்ணிக்கு சென்று சிறப்பு ஜெபம் செய்தால் நினைத்தபடி எல்லாம் நடக்கும் என்றும், அதிக மதிப்பெண்களை பெறலாம் என்றும் என்னிடம் கூறினார்.
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வரவேண்டும் என்றார். வேளாங்கண்ணி சென்றதும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்க வைத்தார். லாட்ஜ் அறையில் வைத்து என்னை ஆசிரியர் அமலன் கற்பழித்து விட்டார்.
யாரிடமும் இது பற்றி கூற வேண்டாம். நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். என் வாழ்க்கையையே அவர் சீரழித்து விட்டார்.
இனிமேல் நான் உயிர் வாழ விரும்பவில்லை. தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் எனக் கூறியதும் என்னை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டுவிட்டார். அவருக்கு தெரிந்த ஒரு வக்கீலிடம் என்னை ஒப்படைத்து விட்டு ஓடிவிட்டார் என்று மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கற்பழிப்பு புகார் கூறியுள்ளதால், மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் ஆசிரியர் அமலனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications