கொல்லப்பட்ட எஸ்.ஐ. வெற்றிவேல் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெற்றிவேல், 7.1.2010 அன்று, அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் காவல்நிலையம் திரும்பிக் கொண்டிருந்த போது, பிற்பகல் சுமார் 2.40 மணியளவில் கடனாநதி பாலம் அருகே அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரை வழிமறித்து, நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த வெற்றிவேல், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது சம்பந்தமாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
உதவி ஆய்வாளர் வெற்றிவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் கருணைத் தொகையும், தமிழக முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரது குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருக்கு கூடுதல் டிஜிபி ஆறுதல்
இதற்கிடையே, வெற்றிவேல் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
தமிழக ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லை மாவட்டம் வந்தார். மதியம் ஆழ்வார்குறிச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து மாலையில் புளியங்குடி அருகே உள்ள முள்ளிகுளத்தில் அவரது வீட்டிற்கு நேரில் சென்றார். அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி கண்ணப்பன் ஆகியோரும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் வெற்றிவேலின் மனைவி பிரேமா, மகன் அசோக் குமார், மகள் சிந்துபாரதி, ஆகியோரிடம் ஆறுதல் கூறினார். மேலும் அவரது மனைவி பிரேமாவை அரசு பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டு கொண்டார்.
குழந்தைகள் அசோக் குமார், சிந்துபாரதி ஆகியோரின் படிப்பு செலவுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவரது சகோதர்களிடம் வெற்றிவேலின் பணிக்காலம் குறித்தும் கூடுதல் டிஜிபி கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications