Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்.ஐ கொலையாளிகள் பைக்கில் ஜெ. படம்-இரட்டை இலை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னமும் இருப்பதால் அவர்கள் அதிமுகவினரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்று நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 7.1.2010 அன்று ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் என்பவரை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவ இடத்தில் குற்றவாளிகள் விட்டுச்சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறை கைப்பற்றி தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவற்றில் ஒரு மோட்டார் சைக்கிள் டிஎன் 72-எக்ஸ் 0444. இந்த மோட்டார் சைக்கிளை குற்றவாளி கந்தசாமி சம்பவத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு தென்காசிக்கு அருகில் உள்ள பாவூர்சத்திரத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்.

விலைக்கு வாங்கியவுடன் சில தினங்கள் அந்த மோட்டார் சைக்கிளை தென்காசியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த மோட்டார் சைக்கிளின் பின்பக்க நம்பர் பிளேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் படமும், இரட்டை இலை சின்னமும் ஒட்டப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் அ.தி.மு.க.வினருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

கொலைத் திட்டம் - கைதானவர்கள் விவரிப்பு..

இதற்கிடையே எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனைக் கொல்லத் தீட்டப்பட்ட சதியில், வெற்றிவேல் சிக்கிக் கொண்டது எப்படி என்பது குறித்து கைது செய்யப்பட்டுள்ள சிவசுப்பிரமணியனின் மைத்துனர் கந்தசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது...

எனது தங்கை சிவகாமிக்கும், கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்துக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில வாரங்களிலேயே சிவசுப்பிரமணியன் தகராறு செய்ய ஆரம்பித்தார். நாங்கள் பொய்யான கல்வித் தகுதியை சொல்லி எனது தங்கையை அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி பிரச்சினை செய்தார். நாங்கள் சமரசம் செய்து வைத்ததின் பேரில் சேர்ந்து வாழ்ந்தனர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அவர் சுயரூபத்தை காட்டத் தொடங்கினார். எனது தங்கையை சித்ரவதை செய்து கூடுதல் வரதட்சணை கேட்டார். நாங்கள் மீண்டும் சுமூகமாக பேசி அவருக்கு கார் வாங்கித் தருவதாக கூறினோம். அதையும் ஏற்காமல் என் தங்கை சிவகாமியை வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

இதனால் அவர் மீது வரதட்சணை புகார் கொடுத்தோம். நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதன் எதிரொலியாக அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், சில மாதங்களிலேயே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டார்.

நாங்கள் எங்களுக்கு தெரிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதற்கு சிவசுப்பிரமணியன் ஒத்துவரவில்லை.

எனது தங்கை வீட்டில் வாழாவெட்டியாக இருந்தது எங்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணமான சிவசுப்பிரமணியனை கொலை செய்ய முடிவு செய்தோம். அதற்காக எங்களுடைய உறவினரும், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருமான சண்முகசுந்தரத்திடம் ஆலோசனை நடத்தினோம்.

அவர் அதற்கான திட்டத்தை வகுத்து கொடுத்தார். அதற்காக கூட்டாளிகளுடன் ஆழ்வார்குறிச்சிக்கு வந்துவிட்டோம். நாங்கள் தங்குவதற்கு ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த கள்ளபிரான் என்பவர் உதவி செய்தார். அவர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை கொலை செய்யும் திட்டத்துக்கு உடந்தையாக இருந்தார். அவருடைய தோட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தோம்.

கள்ளபிரானுடன் தொடர்பு கொள்ள வசதியாக அவருக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்தோம். திட்டமிட்டபடி கொலை திட்டத்தை நிறைவேற்ற பழைய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வாங்கினோம்.

கடந்த ஒரு மாதமாக எனது தம்பிகள் முருகன், கண்ணன் ஆகியோருடன் ஆழ்வார்குறிச்சியில் தங்கி இருந்து சிவசுப்பிரமணியனை கண்காணித்து வந்தோம்.

சிவசுப்பிரமணியன் அடிக்கடி அம்பாசமுத்திரம் கோர்ட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வருவார். அவரை ஆழ்வார்குறிச்சியில் வைத்து கொலை செய்ய முடிவு செய்தோம்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி, அம்பாசமுத்திரத்தில் எங்களுடைய நண்பர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவர் அன்று மதியம், அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார்குறிச்சியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

நாங்களும் திட்டமிட்டபடி சிவசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளில் வரும்போதே வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துவிட ஆயுதங்களுடன் ஆயத்தமாக நின்றோம். மோட்டார் சைக்கிள் வருகையை எதிர்பார்த்து ஒரு புதரில் பதுங்கி இருந்தோம். ஆழ்வார்குறிச்சி ஆற்றுப் பாலத்தை மோட்டார் சைக்கிள் கடந்த உடன், சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் வருவது உறுதியாக தெரிந்தது.

அருகில் வந்ததும் நாங்கள் தயாராக வைத்து இருந்த வெடிகுண்டுகளை வீசினோம். இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சிக்கிக் கொண்டார். நிலை குலைந்து படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். அவருடைய கால் சிதைந்தது. உடனே அவருடைய கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினோம்.

அப்போது சுழல் விளக்கு சத்தத்துடன் கார்கள் வந்தன. ஏதோ அதிகாரிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினோம். அந்த காரில் வந்தவர்களுக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் எங்களை துரத்தியதால், மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினோம்.

பின்னர்தான் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், டி.பி.எம்.மைதீன்கான், நெல்லை கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் அந்த வழியாக காரில் வந்தது எங்களுக்கு தெரியவந்தது.

எங்களுடைய நண்பர் அளித்த தவறான தகவலால் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கொலை செய்து விட்டோம். எங்கள் திட்டத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தப்பிவிட்டார். இந்தநிலையில் நானும், கள்ளபிரானும் பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் நின்றபோது போலீசார் எங்களை கைது செய்தனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+