கற்பழிப்பு சாமியார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்?

நுங்கம்பாக்கம் காம்தார் நகரைச் சேர்ந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் தன் வீட்டுக்கு வேலைக்கு வந்த தேனாம்பேட்டை கிரியப்பா ரோட்டைச் சேர்ந்த ஹேமலதாவை கற்பழித்து, ஆபாசப் படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரை பிடித்த போலீசார் வீட்டில் சோதனை நடத்தியபோது ஒரு புலித் தோல் சிக்கியது. இதையடுத்து அவரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்யாமல் புலித் தோல் பதுக்கிய வழக்கில் மட்டும் போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய தொழிலாளர் துறையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள இவர் மீதான தகவல்கள் அனைத்தும் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந் நிலையில், மந்தைவெளியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டை ஆக்கிரமித்து, இவர் அறக்கட்டளை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. வீட்டை காலி செய்யச் சொன்னபோது அந்தப் பெண்ணை மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
மேலும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் தியாகியிடம், டெல்லியில் உள்ள கட்டடத்தை விற்பனை செய்வது தொடர்பாக சாமியார் ரூ. 1 கோடி வரை மோசடி செய்ததாகவும் புதிய புகார் கூறப்பட்டுள்ளது.
மேலும் சிங்கப்பூரில் சாமியார் தங்கியிருந்தபோது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய கேரளத்தைச் சேர்ந்த லூசி என்ற பெண் சாமியார் மிரட்டியதால் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பிய பின் சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு புகாரும் கூறப்படுகிறது.
இன்டர்போல் உதவி:
இதையடுத்து சிங்கப்பூர் மற்றும் மற்ற வெளிநாடுகளில் சாமியார் மீது வேறு வழக்குகள் ஏதும் பதிவாகியுள்ளனவா என்பது குறித்து தகவல்களை திரட்ட இன்டர்போல் அமைப்பின் உதவியை நாட போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஹேமலதாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் போலீஸார், சாமியாருக்கும் பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு சாமியார் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளதால் அவரது வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற காவல் துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நிபந்தனை ஜாமீன்:
இந் நிலையில் புலித்தோல் பதுக்கிய வழக்கில் ஸ்ரீகுமாருக்கு சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இதன்படி ஸ்ரீகுமார் மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications